பிரதமர் மோடி மட்டும் இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வரட்டும் அரசியலை விட்டு விலகுகிறேன் - மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக்

மமதா பானர்ஜியின் உறவினர் அபிஷேக்

கைலாஷ் விஜய்வர்கியா முதல் சுவேந்து அதிகாரி வரை, முகுல் ராய் தொடங்கி ராஜ்நாத் சிங் வரை உங்கள் குடும்பத்திலும் வேறு உறுப்பினர்கள் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

  • Share this:
குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அரசியலில் ஈடுபட அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வந்தால் தான் உடனடியாக அரசியலை விட்டே விலகி விடுவேன் என்று மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி பாஜகவில் உள்ள தனது எதிர்ப்பாளர்களுக்கு நேரடி சவால் விடுக்கும் விதமாக தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருங்கிய உறவினரான அபிஷேக் பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டயமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி ஆவார். மேற்கு வங்க அரசியலை பொறுத்தமட்டில் மம்தா பானர்ஜியின் நிழலாகவும், திரிணாமுல் காங்கிரஸில் செல்வாக்கு வாய்ந்த நபராகவும் கருதப்படுபவர் அபிஷேக் பானர்ஜி. இவரை காரணம் காட்டியே மமதா பானர்ஜி வாரிசு அரசியலில் ஈடுபடுவதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து எம்.பி, எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என 40க்கும் மேற்பட்ட தலைவர்கள் வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளனர். இதன் காரணமாக அக்கட்சி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நேரத்தில் வாரிசு அரசியலை காரணம் காட்டி பாஜக தனது பரப்புரைகளில் மமதாவை விமர்சித்து வருகிறது.

இதனிடையே, குல்தாலி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அபிஷேக் பானர்ஜி, தன் மீதான வாரிசு அரசியல் தொடர்பான கருத்துகளுக்கு பதிலடி தந்துள்ளார்.

அதில், “குடும்பத்தில் ஒருவருக்கு மேல் அரசியலில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் பிரதமர் மோடி புதிய சட்ட முன் வடிவை கொண்டு வர வேண்டும், அப்படி கொண்டு வந்தால் அடுத்த கணமே நான் அரசியல் அரங்கத்தில் இருந்து வெளியேறிவிடுவேன்.

கைலாஷ் விஜய்வர்கியா முதல் சுவேந்து அதிகாரி வரை, முகுல் ராய் தொடங்கி ராஜ்நாத் சிங் வரை உங்கள் குடும்பத்திலும் வேறு உறுப்பினர்கள் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அரசியலில் ஈடுபட முடியும் என்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள், அதன் பின்னர் எங்கள் குடும்பத்தின் சார்பில் திரிணாமுல் காங்கிரஸில் மமதா பானர்ஜி மட்டுமே இருப்பார். மிரட்டி பணம் பறிப்பவர் என என் மீது பாஜக தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். என் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டை உண்மை நிரூபித்துக் காட்டுங்கள், பொதுவெளியில் தூங்கில் தொங்க தயாராக இருக்கிறேன்.” என தெரிவித்தார்.

மேலும் சுபாஷ் சந்திர போஸின் 125 வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்ட மேடையில் உரை நிகழ்த்தாமல் மமதா பானர்ஜி புறக்கணித்தது தொடர்பாக அவர் கூறும்போது, மமதா தனது உரையை நிகழ்த்த விடாமல் ஜெய் ஸ்ரீ ராம் என தொடர் கோஷங்கள் எழுப்பினர். பிரதமர் முன்னிலையிலேயே தனக்கு அவமரியாதை நிகழ்ந்ததால் அவர் தனது உரையை வாசிக்கவில்லை என அபிஷேக் பானர்ஜி கூறினார்.
Published by:Arun
First published: