20 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழக சட்டப்பேரவைக்குள் நுழையுமா பாஜக?

20 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழக சட்டப்பேரவைக்குள் நுழையுமா பாஜக?

சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில், 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் சட்டப்பேரவைக்குள் பாஜக நுழையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

  • Share this:
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில், 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் சட்டப்பேரவைக்குள் பாஜக நுழையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு தமிழகத்தின் சட்டப்பேரவையில் இடம் பெறும் வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்  பாஜக சார்பில்  இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு செல்வார்கள் என அக்கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் தொடர்ந்து கூறி வருகிறார்.

தமிழகத்தை பொருத்தவரை பாஜகவின் முதல் எம்.எல்.ஏ. சி. வேலாயுதம் தான் . 1996 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து அவர்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டது.

மைலாப்பூர் தொகுதியில் இருந்து கே.என். லட்சுமனன், தளி தொகுதியில் இருந்து கே.வி. முரளிதரன்,  மயிலாடுதுறை தொகுதியில்  இருந்து ஜெக.வீரபாண்டியன்,  காரைக்குடி தொகுதியில் இருந்து ஹெச். ராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதற்கு பின்னர் நடைபெற்ற 2006 தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாரதிய ஜனதா அனைத்து தொகுதிகளில் தோல்வியடைந்தது.  2011 தேர்தலில் சுப்பிரமணியன் சாமியின் ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பாஜக 204 தொகுதிகளில் போட்டியிட்டது. எனினும், அனைத்து தொகுதிகளிலும் அந்த கட்சி தோல்வியையே  தழுவியது.

பின்னர்,2016 சட்டப்பேரவை தேர்தலில்  இந்திய ஜனநாயக கட்சி,  இந்திய மக்கள்  கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலிலும்  பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்தது. தற்போதைய, தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, 20 தொகுதிகளில் களம் கண்டுள்ளது.

அரவக்குறிச்சி-அண்ணாமலை, ஆயிரம் விளக்கு- குஷ்பூ, தாராபுரம்(தனி)-எல்.முருகன், காரைக்குடி- ஹெச்.ராஜா, கோவை தெற்கு- வானதி சீனிவாசன், நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி, திருவண்ணாமலை- தணிகைவேல், குளச்சல் - ரமேஷ், ராமநாதபுரம் - குப்புராம், மொடக்குறிச்சி- சி.கே.சரஸ்வதி, துறைமுகம் - வினோஜ் பி செல்வம், திருக்கோவிலூர் - கலிவரதன், திட்டக்குடி (தனி)- பெரியசாமி, விருதுநகர் - பாண்டுரங்கன், திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், மதுரை வடக்கு - சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

எல்.முருகன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், அண்ணாமலை, குஷ்பூ, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பிரபல வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இந்த முறை நிச்சயம் சட்டப்பேரவைக்குள் பாஜக நுழையும் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாஜக சட்டமன்றத்துக்குள் நுழையுமா என்பது நாளை தெரிந்துவிடும்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: