தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கை என்ன?

தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கை என்ன?

குற்ற பிண்ணனி கொண்ட வேட்பாளர்களின் விபரங்களை தொலைக்காட்சிகளில் விளம்பர படுத்த வேண்டும் என்று பாஜக சார்பாக வலியுறுத்தப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் 11 அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், 80 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்றார். மேலும் புதிய விதிமுறைகள் குறித்து விரிவாக தெரிவிப்பதோடு, வாக்காளர் அடையாள அட்டையை இணையதளத்தில் சரி பார்த்துக்கொள் வசதிகள் செய்து தர கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

கொரோனா தொற்று பாதித்தவருக்கு தனியான வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதாவும் பொள்ளாச்சி ஜெயராமன் தமிழக தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியதாக கூறினார்.

இதே போல திமுக சார்பாக கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தபால் வாக்குகளை முறைகேடாக பயன்படுத்தி தான் பிகாரில் பாஜக ஆட்சியை பிடித்தது. எனவே 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கொரோனா பாதித்தவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பதற்கு அனுமதிக்குபோது எவ்வித குளறுபடிகளும் முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும் பதட்டமான வாக்குசாவடிகள் மற்றும் அமைச்சர் தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்குவது, ஆளும் கட்சியினர் மக்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்துகிறார்களா என்று கண்காணிக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

பணப்பட்டுவாடவை தடுத்து நிறுத்தினால்தான் 234 தொகுதிகளிலும் முறையாக தேர்தல் நடைபெறும் என்பதோடு, 80 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிப்பதை முறைப்படுத்தவேண்டும் என்றும் காங்கிரஸ் சார்பாக வலியுறுத்தப்பட்டது.

தேர்தல் விதிமுறைகளை தமிழில் அச்சடித்து விநியோகிக்க வேண்டும். பீகாரில் அப்பட்டமாக தேர்தல் விதிமுறை மீறப்பட்டது, இதுபோன்று தமிழகத்தில் நிகழாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பிரதமர் மோடி, அமித்ஷா வருகையின் போது தேர்தல் விதிமீறல் நடைபெற்றதாகவும் மாற்றுத்திறனாளிகள் வாக்கு பதிவு நடைமுறையில் திருத்தம் கொண்டுவர வேண்டும்என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தி தொடர்பாளர் வீரபாண்டியன் வலியுறுத்தினார்.

வாக்களிக்க வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே வரிசைகள் ஏற்பாடு செய்வதோடு, குற்ற பிண்ணனி கொண்ட வேட்பாளர்களின் விபரங்களை தொலைக்காட்சிகளில் விளம்பர படுத்த வேண்டும் என்று பாஜக சார்பாக வலியுறுத்தப்பட்டது. அதே போல 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு அளிக்கும் முறை வரவேற்பதாகவும் பாஜக தெரித்துள்ளது. மேலும், வாகன சோதனைகளின் போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது. என்று தேமுதிக சார்பாக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ்.பாரதி, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் தாமோதரன், வழக்கறிஞர்நவாஸ், பாஜக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த பால் கனகராஜ், பாலசந்திரன் உள்ளிடோர் பங்கேற்றனர். மேலும்,தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ்,  திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
Published by:Vijay R
First published: