மோடியும் பாஜக தலைவர்களும் பெற்ற வெற்றி பொய்யானது, மக்களை இவர்களால் நம்பவைக்க முடியவில்லை- யஷ்வந்த் சின்ஹா கருத்து

யஷ்வந்த் சின்ஹா

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமை திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்துள்ளது. இதனையடுத்து இந்த தேர்தல் வெற்றி உத்தரப்பிரதேசத்தின் அடுத்த தேர்தலிலும் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறிஉள்ளார். 

  • Share this:
    சட்டப்பேரவைத் ேதர்தலுக்கு முன்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாஜக முன்னாள் மூத்த தலைவரும், முன்னாள் மத்தியஅமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா இன்று பேட்டிஅளித்தார்.
    திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவுடன் யஷ்வந்த் சின்ஹாவுக்கு துணைத் தலைவர் பதவியை மம்தா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரிணமூல் காங்கிரஸ் வெற்றி குறித்து யஷ்வந்த் சின்ஹா அளித்த பேட்டியில், “மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.மாநிலபாஜக தலைவர் திலிப் கோஷ் , பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா ஆகியோரும் ராஜினாமா செய்ய வேண்டும்.

    மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் தாக்கம் அடுத்த ஆண்டு நடக்கும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும்,2024ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.

    இந்த தேர்தல் முடிவுகள் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பெற்றது மகத்தான வெற்றி என்றும், மோடியும், பாஜக தலைவர்களும் பெற்றது பொய்யான வெற்றி என்று உணர்த்துகிறது.
    ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆட்களை இறக்கி, பொதுக்கூட்டத்தில் கூட்டத்தை சேர்ந்து பாஜக தலைவர்கள் தங்களுக்கு ஆதரவு இருப்பதாகக் காண்பித்தனர். பிரச்சாரத்தின் போது மம்தா பானர்ஜியை அவதூறாகப் பேசியதற்கு பாஜகவினருக்கும், பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் கோடிக்கணக்கான மக்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள். மம்தாவுடன்தான் நாங்கள் நிற்போம் என மக்கள் உணர்த்திவிட்டார்கள்.

    மம்தா பானர்ஜியின் மக்கள் பணியைப் பார்த்து மக்கள் திருப்தி அடைந்துள்ளார்கள், மாநிலத்தில் வளர்ச்சி மனநிறைவைத் தருகிறது என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. உண்மையான மாற்றத்துக்கு வந்துள்ளதாக பாஜக தலைவர்கள் கூறினாலும், மக்களை அவர்களால் நம்பவைக்க முடியவில்லை”
    என்றார் யஷ்வந்த் சின்ஹா. இவர் பழைய பாஜக தலைவர்களுள் ஒருவர் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்தவர், மோடி அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர்களில் பலர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர், இதில் 3 பேரைத் தவிர மற்றவர்கள் மண்ணைக்கவ்வியுள்ளனர். இது கட்சித்தாவிகளுக்கும் ஊழல் வாதிகளுக்கும் ஒரு பாடம் என திரிணாமூல் கட்சியினர் அவர்களது தோல்வியை விமர்சித்துள்ளனர்.
    Published by:Muthukumar
    First published: