West Bengal Election Result | Mamata | திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் போட்டியிட்டு மண்ணைக் கவ்விய முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்- பாடம் புகட்டிய மக்கள்

பாஜக

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து பல எம்எல்ஏக்கள், தற்போதைய தேர்தலில் 3 பேரைத் தவிர மற்றவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். 

  • Share this:
நந்திகிராம் பரபரப்பு தொகுதியில் பல்வேறு இழுபறி நிலைகளுக்குப் பிறகு திரிணாமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவிய சுவேந்து அதிகாரி கடைசியில் வெற்றி பெற்றார், மம்தா பானர்ஜி தோற்றார். ஆனால் இதில் தவறு நிகழ்ந்திருப்பதாக மறு வாக்கெண்ணிக்கைக்கு திரிணாமூல் முடிவு எடுத்துள்ளது.
இவரோடு இன்னும் 2 பேர் பாஜகவில் சேர்ந்து வெற்றி பெற்றாலும் மேற்கு வங்க மக்கள் கட்சி தாவிய வேறு வேட்பாளர்களுக்கு தோல்வியைப் பரிசாக அளித்து பாடம் புகட்டியுள்ளார்கள்.

சுவேந்து அதிகாரி போராடி இழுபறியில் சர்ச்சை வெற்றியை ஈட்டியதை அடுத்து 2017-ல் திரிணாமூல் கட்சியிலிருந்து பாஜகவுக்குத் தாவிய கோடீஸ்வரர் முகுல் ராய் கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமூல் நடிகர் வேட்பாளர் கவுஷானி முகர்ஜியை வீழ்த்தினார். அதே போல் வடக்கு வங்காளத்தில் நடபாரியில் திரிணாமூலிலிருந்து பாஜகவுக்குத் தாவிய மிஹிர் கோஸ்வாமி இழுபறிக்கு பிறகு வெற்றி பெற்றார், இவர்கள் மூன்று பேர் தவிர பாக்கி கட்சித்தாவிகள் மண்ணைக்கவ்வினர்.

2017 முதல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து சுமார் 37 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 140 பேர் பாஜகவுக்குத் தாவினர். இப்படிச் சேர்ந்தவர்கள், 2020-ல் பாஜகவுக்குத் தாவியவர்கள், தேர்தல் சந்தர்பவாதத்தைப் பயன்படுத்தித் தாவியவர்கள் என்று அனைவருக்கும் பாஜக டிக்கெட் கொடுத்தது.

இதில் முன்னாள் அமைச்சர் ராஜிவ் பானர்ஜி உட்பட அனைவரும் தோல்வி தழுவி மண்ணைக்கவ்வினர். சிங்கூர் இயக்கத்தின் முக்கிய முகங்களுள் ஒன்றான ரவீந்திர நாத் பட்டாச்சார்யா, முகுல் ராயின் மகன் சுப்ரான்ஷு ராய் ஆகியோருக்கு மக்கள் பாடம் புகட்ட மண்ணைக் கவ்வினர்.

பாலே தொகுதியில் போட்டியிட்ட பைஷாலி டால்மியா, டைமண்ட்ஹார்பர் தொகுதியில் போட்டியி்டட தீபக் குமார் ஹால்தர், உத்தர்பராவில் போட்டியிட்ட பிரபிர் கோஷல், கால்னா தொகுதியில் போட்டியிட்ட பி்ஸ்வஜித் குண்ட், சிங்கூரில் போட்டியிட்ட ரவிந்திரநாத் பட்டாச்சார்யா ஆகியோர் திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவி்ல இணைந்து தேர்தலில் வாய்ப்பு பெற்றனர்.இவர்கள் அனைவருமே தோல்வி முகம் காட்டியுள்ளனர்.
மாநில பாஜக தலைமை திலிப் கோஷ் கூறும்போது, “நாங்கள் விருப்பப்பட்டது போல் முடிவுகள் இல்லை. என்ன தவறு நடந்தது என்பதை ஆராய வேண்டும்”என்றார்.

தெற்கு கொல்கத்தாவில் பாபானிபூரில் திரிணாமூலிலிருந்து தாவிய ருத்ராணி கோஷை பாஜக நிறுத்தியது. ஆனால் மாநில மின்சார அமைச்சர் சோபன் தேவ் சாட்டர்ஜ்யிடம் இவர் மண்ணைக்கவ்வினார்.

அமித் ஷா, பிரதமர் மோடி என்ற நாட்டின் கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் மாங்கு மாங்கென்று ஈடுபட்டனர். ஆனால் வேட்பாளர் தேர்வில் கோட்டை விட்டனர்.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திரிணாமூல் 213 இடங்களையும் பாஜக 77 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
திரிணாமூல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி இது பற்றிக் கூறும்போது, “வெளியாட்களை பலவந்தமாகப் புகுத்தி வெற்றி பெற பாஜக மேற்கொண்ட முயற்சிக்கு மக்கள் கொடுத்த அடியே இந்தத் தோல்வி. மத்திய விசாரணை முகமை, ஊழல் தலைவர்களுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுத்தது, அடி வாங்கியது” என்றார்.
Published by:Muthukumar
First published: