ஒரு கோடி வேலைவாய்ப்புகள், லவ் ஜிகாத் சட்டம், : மேற்கு வங்கத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசத் தயாராகும் பாஜக

பாஜக

அதே போல் லவ் ஜிகாத் சட்டத்தையும் கொண்டு வருவோம் என்று இந்துக்களை திருப்தி படுத்தும் அறிவிப்பும் வெளியாகும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கப்படுகிறது. 2019 லோக்சபா தேர்தலில் வாக்குகளை பாஜகவுக்கு அள்ளிக் குவித்த வங்கதேசத்திலிருந்து வந்த மடுவா இந்து வாக்குகளைக் குவிக்க குடியுரிமை போன்ற அறிவிப்புகளும் நிச்சயம் உண்டு என்கின்றனர்.

 • Share this:
  மேற்கு வங்கத்திற்கென்றே தனி நிதி ஆயோக், ஒரு கோடி வேலைவாய்ப்புகள், லவ் ஜிகாத் சட்டம், சமய சுற்றுலா என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அள்ளி வீசத் தயாராகி வருகிறது.

  கோவிட் 19 லாக் டவுன் காலக்கட்டத்தில் நாட்டில் 12 கோடி பேர் வேலையிழந்துள்ளனர், அவர்களில் 1% பேருக்குக் கூட இன்னும் வேலை வழங்க முடியவில்லை, இதில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளாம் என்று அங்கு எதிர்க்கட்சிகள் பாஜக மீது கிண்டல் கேலிகளைக் கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர்.

  இன்னும் சில நாட்களில் மேற்கு வங்கத்துக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிடவுள்ளது மம்தா காயமடைந்து மருத்துவமனையில் இருப்பதால் திரிணாமுல் தேர்தல் அறிக்கை கொஞ்சம் தாமதமாகும் என்று தெரிகிறது.

  வழக்கம் போல் ஊழலற்ற வெளிப்படைத்தன்மை கொண்ட ஆட்சி, வளர்ச்சி மந்திரம், மேற்கு வங்கத்தில் தொழிர்துறை வளர்ச்சியின்மை, மேற்கு வங்கத்தில் முதலீடு செய்வதற்கான சாதகமற்ற சூழலினால் கைவினைஞர்கள், தொழிலாளர்கள், திறமையுடையோர் ஆகியோர் வெளிமாநிலங்களுக்கு புலம் பெயர்வதை பாஜக சுட்டிக்காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதனையடுத்து தொழிற்துறை சாதகச் சூழலை ஏற்படுத்த ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக்’ என்ற அறிவிப்பும் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது தனித்த அமைப்பாக உருவாக்கி மத்திய அரசுடன் நேரடி தொடர்பு, மாநில அரசு தலையீடின்மை போன்றவற்றை வலியுறுத்தவுள்ளது.

  நிதி ஆயோகை பயனற்ற அமைப்பு என்று மம்தா பலமுறை கிண்டலடித்ததும் இங்கு நினைவு கூரத்தக்கது. பிப்ரவரி 20ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை மம்தா புறக்கணித்ததும் குறிப்பிடத்தக்கது. மே 2ம் தேதி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி வேலை வாய்ப்பு என்ற இனிப்பு மிட்டாய் அறிவிப்பையும் பாஜக வெளியிட தயாராகி வருகிறது.

  பணத்தை வெட்டு என்ற திரிணாமூல் ஆட்சியை விமர்சிக்க பாஜக பயன்படுத்தும் வார்த்தை சிண்டிகேட் ராஜ், இதை ஒழிப்போம் என்று தேர்தல் அறிக்கையில் கூறுவார்கள். அனைத்தையும் விட ‘மம்தாவின் முதலாளிகளுக்கான ஆதரவுக்கு’ எதிராக பாஜக அறிவிப்பு வெளியிடுமாம்.

  மேலும் சாரதா சிட்பண்ட் மோசடி, ரோஸ் வேலி சிட்பண்ட் மோசடிக்கு விரைவில் விசாரணை முடித்து தீர்வுகாணப்படும் என்று பாஜக கூறவும் வாய்ப்புள்ளதாக மேற்கு வங்க பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  கல்வித்துறையில் பாடப்புத்தகங்களில் தேசியவாதம் குறித்த பாடங்கள் அதிகம் இடம்பெறச் செய்வோம் என்று கூறலாம். இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்பை அடியோடு ஒழிக்கப்படும் என்று பாஜக அறைகூவல் விடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

  அதே போல் லவ் ஜிகாத் சட்டத்தையும் கொண்டு வருவோம் என்று இந்துக்களை திருப்தி படுத்தும் அறிவிப்பும் வெளியாகும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கப்படுகிறது. 2019 லோக்சபா தேர்தலில் வாக்குகளை பாஜகவுக்கு அள்ளிக் குவித்த வங்கதேசத்திலிருந்து வந்த மடுவா இந்து வாக்குகளைக் குவிக்க குடியுரிமை போன்ற அறிவிப்புகளும் நிச்சயம் உண்டு என்கின்றனர்.

  பிரதமர் கிசான் நிதி மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.18,000 தொகையையும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்படும் என்று மேற்கு வங்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  Published by:Muthukumar
  First published: