தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி - வி.பி. துரைசாமி பரபரப்பு பேட்டி
தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி - வி.பி. துரைசாமி பரபரப்பு பேட்டி
பாஜக துணைத் தலைவர் வி.பி. துரைசாமி.
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி எனவும், பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: இடஒதுக்கீடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். மேலும், இட ஒதுக்கீட்டில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை தவறு. இது அரசியலுக்காக செய்கிறார். இவ்விவகாரத்தில் பல்வேறு கட்சிகள் வழக்கு தொடுத்து இருந்தன. ஆனால், திமுக கட்சியால் தான், 27% பெற்று தந்ததாக மாவட்டம் தோறும் போஸ்டர் அடித்து கொண்டனர்.
திமுக தவிர வேறு எந்த கட்சியும், எங்களால் தான் இட ஒதுக்கீடு கிடைத்தது என்று முரசு கொட்டவில்லை. அதேபோல, கட் ஆப் மார்க் தொடர்பாக ஸ்டாலின் கூறும் கருத்து பொய். மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியது தவறில்லை. ஆனால், முன்னேறிய வகுப்புகளுக்கு 10% ஒதுங்கியது தவறா என ஊடகம் வாயிலாக நான் கேள்வி கேட்கிறேன். வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு என எந்த விவகாரத்திலும் மத்திய அரசு தவறாக செல்லவில்லை. பொய் பிரச்சாரம் மூலம் மக்களை திசை திருப்ப வேண்டாம்.
ஸ்டாலினை நான் கேட்டுக்கொள்வது, நீண்ட காலமாக ஜாதியை சொல்லி அரசியல் செய்து விட்டீர்கள், இனி இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். திமுக அதிக எம்.பிக்களை கொண்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் அவர்கள் தான் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசுவதை விட, வெளியில் வந்து தான் அதிகம் பேசுகின்றனர். வெளிநடப்பு செய்வதை மட்டுமே முதல் காரியமாக அவர்கள் செய்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் கோவிட் காலத்தில் ஆக்கபூர்வமான கருத்துகளை, யோசனைகளை அளிக்க வேண்டும். கனிமொழிக்கு விமான நிலையத்தில் இந்தி மொழியால் பிரச்னை ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. முறையாக விசாரித்தால் உண்மை தெரியும். கனிமொழி கருத்திற்கு ஆதரவளிப்போரின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. இவர்கள் நாடாளுமன்றத்திலோ, சட்டத்திலோ உள்ளே பேசுவதை விட வெளியே தான் அதிகம் பேசுகிறார்கள்.
தமிழகத்தில் திமுக vs அதிமுக என்ற நிலை மாறி, திமுக vs பாஜக என்ற நிலை உருவாகியுள்ளது. பாஜகவை எந்த கட்சி அனுசரித்து செல்கிறதோ அவர்களுடன் கூட்டணி, பாஜக தலைமையில் தான் ஆட்சி நடைபெறும்.
பாஜவிற்கு திமுகவிலிருந்து யார் வருவார்கள் என்று கூறுவது நாகரிகமாகாது, நிச்சயம் நிறைய பேர் வருவார்கள் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர்கள்(திமுக) அதிர்ச்சிக்குள்ளாவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.