தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் விராலிமலை தொகுதியில் போட்டியிடுகிறார். விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் மூன்றாவது முறையாக களம் காண்கிறார். தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். தந்தைக்கு ஆதரவாக அவரது இளையமகள் தேர்தல் பிரசாரத்துக்கு வந்துள்ளார். வேனில் நின்றபடியே தந்தைக்காக பிரசாரம் செய்து வருகிறார்.
விராலிமலை தொகுதியில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் என்னோடு என் இளைய மகள். மக்களின் பேராதரவுடன் மகத்தான ‘வெற்றி’காண பயணம் என மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விஜயபாஸ்கர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த விஜயபாஸ்கரின் வாகனத்தில் ஒரு சிறுமி இருப்பதை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
கூட்டத்தினரை நோக்கி பேசத் தொடங்கிய அந்த சிறுமி, நான் விஜயபாஸ்கரோட இரண்டாவது பொண்ணு என்றதும் அங்கு கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்பினர். விஜயபாஸ்கரின் முகம் மகிழ்ச்சியில் சிவந்தது. அந்த சிறுமி பேசுகையில், “ எங்க அப்பா இரவும் பகலும் உங்களுக்காக தான் உழைக்கிறார். எப்பவும் உங்களுக்காக தான் உழைப்பார். உங்களுக்கு எதாவது ஒன்று என்றால் அவர் துடித்துப்போய்விடுவார்.
உங்களுக்கு காது கேட்கலைன்னா காது மெஷினா வருவார். கண்ணு தெரியலைன்னா கண்ணாடியா வருவார். கஜா புயல்னா கரெண்டா வருவார். கொரோனா மாற்று மருந்தா வருவார். பொங்கல்ன்னா சீரா சிறப்பா வருவார். தீபாவளி பொங்கலை எங்களோடு கொண்டாடுவதை விட உங்களுடன் கொண்டாடுவதைதான் அவர் விரும்புவார். எங்க அப்பான்னு சொல்றத விட அவர் உங்க வீட்டு பிள்ளை. உங்க வீட்டு பிள்ளைக்கு இரட்டை இலையில் ஓட்டு போடுவீங்களா. நம்ம சின்னம் இரட்டை இலை” எனக் கூட்டத்தினரை நோக்கி உற்சாகமாய் பேசினார்.