சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆதிராஜா ராமை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், கொளத்தூர் தொகுதியில் ஆதிராஜாராம் வென்றார் எனும் செய்தி நாடு முழுவதும் ஒலிக்க வேண்டும் எனக்கூறினார். 200 தொகுதிகள் கிடைத்து விட்டது என ஸ்டாலின் கூறியதை குறிப்பிட்ட முதலமைச்சர், முதலில் மக்கள் வாக்களித்து, எண்ணிய பிறகுதான் தெரியவரும் என்றார்.
மேலும் கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி பெறுவதே சந்தேகம்தான் எனவும் பேசினார். சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்ற முதல்வர், ஆட்சியில் இல்லாதபோதே உதயநிதி ஸ்டாலின், டிஜிபியை மிரட்டுவதாக சாடினார்.
முன்னதாக திருவொற்றியூரில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரின் தாயையே கீழ்த்தரமாக பேசும் திமுக, ஆட்சிக்கு வந்தால், தமிழக பெண்களின் நிலை என்ன ஆகும் எனக்கூறி கண்கலங்கினார். உங்களைப் போல் நானும் ஒரு சாதாரண குடும்பத்தில் வளர்ந்தவன் தான் என நா தழுதழுக்க முதலமைச்சர் பேசினார்.