அ.தி.மு.க அதிருப்தி வாக்குகளை அறுவடை செய்யுமா அ.ம.மு.க - அரசியல் நோக்கர்களின் பார்வை என்ன?

டிடிவி தினகரன்

அதிமுகவின் அதிருப்தியாளர்களின் வாக்குகளும் அமமுகவே செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அமமுக 3வது பெரிய அணியாக வலம் வரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள அமமுக, எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  உட்கட்சி பூசலால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை தொடங்கினார். அதிமுகவை மீட்டெடுப்பதை தமது லட்சியம் எனவும் சூளுரைத்தார். பெங்களூரு சிறையில் சசிகலா இருந்த போது, அவ்வப்போது அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சிறையில் இருந்து சசிகலா அண்மையில் வெளியே வந்த சூழலில், அதிமுகவும் - அமமுகவும் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சசிகலா. எனினும் அமமுக தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அறிவித்த தினகரன், பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

  அமமுக கூட்டணியில் ஓவைசியின் AIMIM கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு, கோகுல மக்கள் கட்சி, மருது சேனை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.மக்கள் நீதி மய்யத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த எஸ்டிபிஐ கட்சி, உடன்பாடு எட்டப்படாததால், அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு ஆலந்தூர் ஆம்பூர், பாளையங்கோட்டை, திருச்சி மேற்கு, திருவாரூர் மற்றும் மதுரை மத்தி ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த மக்களவை தேர்தலில், அமமுகவுடன், எஸ்டிபிஐ கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

  இந்நிலையில், அதிமுகவில் தற்போதைய எம்எல்ஏக்கள் 41 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், அவர்களது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், அதிமுகவின் அதிருப்தியாளர்களின் வாக்குகளும் அமமுகவே செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அமமுக 3வது பெரிய அணியாக வலம் வரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
  Published by:Ramprasath H
  First published: