100 சதவீதம் வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்போம் - திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் உரை

100 சதவீதம் வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்போம் - திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் உரை

மு.க.ஸ்டாலின்

ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

  • Share this:
திமுக ஆட்சிக்கு வந்ததும், நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்கும் குடும்பத் தலைவியர் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்ட அவர், ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திமுக-வின் பொதுக் கூட்டம், திருச்சி சிறுகனூரில் நடைபெற்றது. இதற்கு 350 ஏக்கர் பரப்பளவில் ஒன்றரை லட்சம் பேர் அமரும் வகையில், பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நுழைவுவாயிலில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்து, பொதுக் கூட்டத்தை தொடங்கிவைத்தார்.

பிற்பகல் 3 மணியளவில் திமுக முதன்மை செயலாளர் கே.என் நேரு வரவேற்புரை நிகழ்த்தினார். இதையடுத்து, பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சுகாதாரம், சமூகநீதி உள்ளிட்ட துறைகளின் தற்போதைய நிலை குறித்து கட்சி நிர்வாகிகளும், வல்லுநர்களும் உரையாற்றினர். தமிழ் பண்பாடு மற்றும் பெருமையை பறை சாற்றும் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.

பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்ததாகவும், நவீன தமிழகமாக உருவாக்கப்பட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார். ஆனால், இந்த அடிப்படை கட்டமைப்பை அதிமுக அரசு சிதைத்துவிட்டதாகவும், ஏப்ரல் 6ம் தேதி அதிமுக அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகிய 7 துறைகளை மேம்படுத்துவது தொடர்பான உறுதிமொழிகளை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எட்டப்படும், தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு 4 லட்சத்திற்கும் மேலாக உயர்த்துவதுடன், ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வறுமை கோட்டுக்கு கீழ் ஒருவரும் இல்லாத முதல் மாநிலமாக தமிழகத்தை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

தமிழகத்தில் இருபோகம் விளையும் நிலத்தின் அளவை, 10 லட்சம் ஹெக்டேரிலிருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர் விநியோகிக்கப்படும், கல்வி, சுகாதாரத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியளவு, மூன்று மடங்காக உயர்த்தப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

அத்துடன், நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்கும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், எழில்மிகு மாநகரங்களை உருவாக்க புதிதாக 9 லட்சத்து 75 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும், அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்ட மீறல்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம், 100 சதவீதம் வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூற, அனைவரும் உறுதியேற்றுக் கொண்டனர்.

 

சட்டமன்றத் தேர்தலில் திமுக-வின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது எனக் கூறிய ஸ்டாலின், திமுக-வினர் வீதிவீதியாக சென்று தொலைநோக்கு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஸ்டாலின் உரையாற்றி முடித்ததும், அவரை துரைமுருகன் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

கூட்டத்தின் நிறைவாக துரைமுருகன், டி.ஆர் பாலு ஆகியோருடன் மு.க. ஸ்டாலின் இணைந்து மேடையில் நடந்து சென்று தொண்டர்களை பார்த்து கையசைத்தார். அப்போது, இரவை பகலாக்கும் விதமாக வாண வேடிக்கை களைகட்டியது.
Published by:Vijay R
First published: