தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வீசுவதால் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாலை 6 மணியில் இருந்து 7 மணிவரை ஒரு மணிநேரம் கொரோனா நோயாளிகள் வாக்கு செலுத்தும் வகையில் வகை செய்யப்பட்டது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேர்தல் வாக்குப்பதிவில் தொய்வு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் இவ்வாறு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு தற்போது நிறைவு பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களை சீல் வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் , “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 71.79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது தொலைபேசி வாயிலாக கிடைத்த தகவல் தான். இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். முழுமையான தகவல் வந்தபின்னர்தான் துல்லியமாக அறிவிக்க முடியும். தமிழகத்தில் அதிகப்படியாக கள்ளக்குறிச்சியில் 78 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்து நாமக்கல் மாவட்டத்தில் 77.91 சதவிகிதம், அரியலூர் மாவட்டத்தில் 77.88 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக சென்னையில் 59.4 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 62.77 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது” என்றார்.