நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றவில்லை, முதல்வர் தான் அல்வா கொடுக்கிறார் - திமுக வாக்குறுதி குறித்து ஸ்டாலின் கருத்து

நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றவில்லை, முதல்வர் தான் அல்வா கொடுக்கிறார் - திமுக வாக்குறுதி குறித்து ஸ்டாலின் கருத்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் கே.பி முனுசாமி கொள்ளையடித்ததால்தான் அவரது அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்ததாக விமர்சித்தார்.

 • Share this:
  அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டு காட்டத் தயாரா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி, பொன்னேரி தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் கும்மிடிபூண்டியில் பிரசாரம் மேற்கொண்டார். நீட் தேர்வால் இதுவரை 14 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், நீட் தேர்வை தடை செய்ய அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சாடினார். திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட அவர், அதிமுக ஆட்சியில் விலைவாசி விஷம் போல ஏறிவிட்டதாகவும் விமர்சித்தார்.

  திமுக வாக்குறுதி அளித்தால் அதனை மிட்டாய் கொடுத்து மக்களை ஏமாற்றப் பார்ப்பதாகக் கூறும் முதலமைச்சர் தற்போது அல்வா கொடுக்க முயற்சிக்கிறாரா என்றும் ஸ்டாலின் கேள்வியெழுப்பினார்.

  திமுக ஆட்சிக்கு வந்தால் மெட்ரோ ரயில் திட்டம் கும்மிடிபூண்டி வரை நீட்டிக்கப்படும், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி காங்கிரஸ் வேட்பாளார் ஆறுமுகத்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி சசிகலா காலில் விழுந்த புகைப்படத்தை காட்டி விமர்சித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை போல அதிமுகவை செல்லாத நோட்டாக மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

  அதன்பின் கிருஷ்ணகிரி தொகுதி திமுக வேட்பாளர் செங்குட்டுவனை ஆதரித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் கே.பி முனுசாமி கொள்ளையடித்ததால்தான் அவரது அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்ததாக விமர்சித்தார்.

  விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் லட்சுமணன் கோலியனூர் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது தேநீர் கடையில் தொண்டர்களுடன் தேநீர் பருகினார். கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட கீழ்களூர், மேக்களூர் உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்

  சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரன் வீடு வீடாக சென்று திமுக தேர்தல் அறிக்கையை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார். பிரசாரத்திற்கு மத்தியில் தொண்டர்களுடன் தேநீர் கடைக்கு சென்று தேநீர் அருந்தினார்.
  Published by:Vijay R
  First published: