தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 466 (13%) பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 207 (6%) வேட்பாளர்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அளித்துள்ள சுய உறுதிமொழி வாக்குமூலங்களைக் (அபிடவிட்) கொண்டு தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பினர் செய்துள்ள ஆய்வு முடிவுகளை திருச்சி பிரஸ் கிளப்பில் வெளியிட்டு, ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ், பேராசிரியர் பத்ரிநாத், பீட்டர், ஸ்ரீவித்யா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த 2011, 2014, 2016, 2019 தேர்தல்களில் வேட்பாளர்கள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டோம். தொடர்ந்து தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தற்போது போட்டியிடும் 3, 998 வேட்பாளர்களில் 3,559 வேட்பாளர்களின் அபிடவிட் ( வாக்குமூலங்கள்) அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், மொத்த வேட்பாளர்களில் 466 (13%) மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 207 (6%) வேட்பாளர்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருப்பத்தூர் சுயேட்சை வேட்பாளர் பழனி, திருச்செந்தூர் அ.தி.மு.க வேட்பாளர் ராதாகிருஷ்ணன், வில்லிவாக்கம் சுயேட்சை வேட்பாளர் பாஸ்கர், கிருஷ்ணராயபுரம் ML நாராயணன், நாங்குநேரி சுயேச்சை ஞானபாஸ்கர், அருப்புக்கோட்டை தி.மு.க வேட்பாளர் கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன் என 7 வேட்பாளர்கள் மீது கொலை வழக்கும் நிலுவையில் உள்ளன என்றும் தகவல்.
மேலும், ஆய்வு செய்யப்பட்டவர்களில் 652 (18%) பேர் கோடீஸ்வரர்கள். 25 வேட்பாளர்கள் தங்களுக்கு சொத்தே இல்லை என்று தெரிவித்துள்ளனர். 430 (12%) பேர் தங்களது PAN எண்ணை குறிப்பிடவில்லை. 44% வேட்பாளர்களுக்கு கடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மொத்தம் 25 வேட்பாளர்கள் தங்களுடைய கல்வி விபரத்தைக் குறிப்பிடவில்லை. மொத்தம் 1, 451 (41%) வேட்பாளர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்கள். மொத்தம் 3 பேர் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள். மொத்தம் 380 (11%) பெண்கள் வேட்பாளர்களாக உள்ளனர் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டனர்.
கொலை, பாலியல் வன்புணர்வு, கடத்தல் வழக்குகள், கொடூரமான குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும். அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ்கொண்டு வர வேண்டும். அரசியல்வாதிகள் மீதான குற்றவழக்குகளை உரிய கால அவகாசத்தில் முடிக்க வேண்டும். கறைபடிந்த வேட்பாளர்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவு, வரிவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளையும் அளித்துள்ளனர்.