`உ.பியோ, பீகாரோ இல்லை... இது தமிழ்நாடு... வாக்குபெட்டியில் கை வைக்க முடியாது’ - பா.ஜ.கவுக்கு துரைமுருகன் எச்சரிக்கை

துரை முருகன்

திமுக வெற்றி பெற்றுவிடும் என தெரிந்து எதிர்கட்சியாக செயல்படத் தான் அதிமுக பணிகளை மேற்கொண்டு வருவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
திமுக வெற்றி பெற்றுவிடும் என தெரிந்து எதிர்கட்சியாக செயல்படத் தான் அதிமுக பணிகளை மேற்கொண்டு வருவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய- மாநில அரசை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுக சென்னை தெற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், ’ஒரு ஆட்சி முடிவுக்கு வரும்போது தான் இதுபோன்று செய்திகள் வரும். அதுபோல தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் மறைமுகமாக உயரும். தேர்தலின்போது பெட்டியில் கை வைக்கலாம் என பாஜக எண்ணலாம். ஆனால் பெட்டியில் கை வைக்க இது உத்திரபிரதேசமோ, பீகாரோ இல்லை. இது தமிழ்நாடு" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ’அங்கு யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதே அவர்களுக்கு தெரியாது. ஆனால் இங்கு பட்டனை அழுத்தும்போதே யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை உறுதி செய்துவிட்டு தான் மக்கள் நகர்வார்கள். இனி திமுகவை வீழ்த்த முடியாது என்ற நிலையில் அதிமுக, திமுகவிடம் சரணாகதி அடைந்துள்ளது. திமுக வெற்றிபெற்றுவிடும் என தெரிந்து எதிர்கட்சியாக செயல்படவே அதிமுகவினர் பணியாற்றி வருகிறது’ என்றார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க தங்களிடம் திட்டங்கள் இருப்பதாகவும் அதனை பார்த்து மற்ற மாநிலங்கள் தெரிந்துகொள்ளட்டும் எனவும் கூறினார். `பெட்ரோல் டீசல் விலை உயர்வை முதல்வர் கண்டித்து இருக்க வேண்டும். அதற்கு தைரியம் இல்லை என்றால் டெல்லியில் சென்று காலில் விழுந்து விலையை குறைந்து இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: