நேர்மையாக இருந்ததால் அதிமுக ஆட்சியில் பந்தாடப்பட்டேன் - சகாயம் ஐஏஎஸ் பேட்டி

சகாயம் ஐஏஎஸ்

பொது மக்களும் இளைஞர்களும் என்னை எப்போதும் ஒரு முன்னுதாரணமாக பார்க்கிறார்கள் என்பது எனக்கு உரிய அங்கீகாரம்

  • Share this:
சகாயம் அரசியல் பேரவை ஆதரவோடு தமிழக சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் 20 பேர் போட்டியிடுகின்றனர். இதனைத்தொடர்ந்து மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நாகஜோதிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

மதுரை கேகே நகர் தனியார் திருமண மண்டபத்தில் களப்பணியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  சகாயம் ஐஏஎஸ், ‘அமைச்சர் செல்லூர் ராஜு மீது தி.மு.க-வினர் வைத்த குற்றச்சாட்டை அவர்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர நான் சான்றிதழ் கொடுக்க முடியாது.உண்மையில் பா.ஜ.கவை எதிர்க்கின்ற ஏ டீம் நாங்கள்தான். எங்களை பா.ஜ.க-வின் பி டீம் என சொல்வது ஆதாரமற்றது. பொதுமக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அதில் குளிர்காய நினைக்கும் பா.ஜ.க-வை இறுதிவரையில் எதிர்ப்போம்.

நாங்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாளர்கள் என்று ஏதேனும் ஒரு ஆதாரத்தை காட்டினால் ஒட்டுமொத்தமாக நாங்கள் பொதுவாழ்க்கையிலிருந்து விலகிவிடுகிறோம். அதேபோன்று கிறிஸ்தவ கைக்கூலி என்ற விமர்சனமும் அருவெறுப்பானது. இது போன்ற கீழ்த்தரமான விமர்சனத்தை வைத்து அவர்களின் மனநிலையை நீங்களே புரிந்துகொள்ளலாம். ஒரு மதத்தில் பிறந்தவன் என்பதற்காக என்னை இவ்வாறு இழிவுபடுத்துவது கண்டனத்திற்குரியது.

அ.தி.மு.க - தி.மு.க இரண்டையும் சம அளவிலேயே எதிர்க்கிறோம். குறிப்பாக அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நான் பந்தாடப்பட்டேன். வட்டாட்சியருக்குண்டான அதிகாரம் இல்லாத பணியில் 7 ஆண்டுகள் நியமித்தார்கள். கைத்தறி கூட்டுறவு துறையில் ஓராண்டிற்குள் நட்டத்தில் இருந்ததை மீட்டு எடுத்து லாபகரமான தொழிலாக மாற்றி அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு லாப பங்கு வழங்கினேன்.
அரசியலில் இறங்க வேண்டும் என்பதெல்லாம் எனது நோக்கமாக இருந்ததில்லை. நடிகர் ரஜினி என்னை சந்திக்க விரும்பியதாகவும், குறிப்பாக அவரது கட்சியில் முதல்வர் வேட்பாளராக பங்கேற்க அழைப்பு விடுத்த போதும் ரஜினி பா.ஜ.க-விற்கு ஆதரவாளர் என்ற செய்தியின் அடிப்படையில் ரஜினியுடனான சந்திப்பை தவிர்த்துவிட்டேன்.

மாவட்ட ஆட்சியராக இருந்ததற்கும் தற்போது ஒரு அரசியல் கட்சியின் வழி நடத்துவதாக இருப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஆனால் பொது மக்களும் இளைஞர்களும் என்னை எப்போதும் ஒரு முன்னுதாரணமாக பார்க்கிறார்கள் என்பது எனக்கு உரிய அங்கீகாரம். நாங்கள் வெளியிட்டுள்ள துண்டு அறிக்கையில் உள்ளதை நிச்சயம் செயல்படுத்துவோம். கால அவகாசம் குறைவாக இருந்த காரணத்தாலேயே 20 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். போட்டியிடும் இளைஞர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் போட்டியிட மறுத்து விட்டேன். நேர்மையான அரசியலை தருவதற்காக களம் இறங்கியுள்ளோம்.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக மதுரையில் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலராக பணிபுரிந்த போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தவும், பணபட்டுவாடாவை தவிர்க்கவும் தொடர்ந்து 20 நாட்கள் தூங்காமல் இரவு பகலாக பணியாற்றியுள்ளேன்.அதனைப் போன்றே தற்போதுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதற்காகவே தமிழக மக்கள் எங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பேசினார்.
Published by:Ramprasath H
First published: