முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒரே சாதனை தமிழகத்தின் கடன் தொகையை 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியதுதான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளான தெற்கு ரயில்வே, அஞ்சல் துறை, வருமான வரி உள்ளிட்ட பணிகளில் 90 சதவீதம் பேர் வடமாநிலத்தவர்கள் பணியாற்றுவதாக தெரிவித்தார்.
தமிழக மாணவர்கள் நலனில் அதிமுக அரசு அக்கறை செலுத்தவில்லை எனவும் அவர் சாடினார். மேலும், காவிரி - வைகை- குண்டாறு திட்டத்தை கடந்த 2008ம் ஆண்டே அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்து விட்டதாக கூறிய அவர், இத்திட்டத்தை மீண்டும் நாளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என குறிப்பிட்டார்.
மேலும் வானத்தை தொடும் அளவுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். மீண்டும் ஆட்சியை பிடித்தால் வேலை வாய்ப்பை உருவாக்குவதாக கூறுகிறார். ஆட்சியில் இருந்த போது ஏன் செய்யவில்லை. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் பிடிக்கப்போவது போல் உள்ளது அவர் சொல்வது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.