தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு ஏறியிருப்பதாக தெரிவித்தார். இதனால், ஒவ்வொரு குடும்பத்தினரும் அதிகமாக செலவு செய்யும் சூழல் ஏற்பட்டிருப்பதாக கூறிய அவர், அதிமுக அரசோ மக்கள் வரிப்பணத்தை எடுத்து தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில், விளம்பரம் செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் நெசவு தொழிலையும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த ஸ்டாலின், தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிமுக பிரமுகர்களின் மகன்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
தேர்தல் பரப்புரைகளின் போது முதலமைச்சர் பழனிசாமி எதிர்க்கட்சியினரை தரக்குறைவாக ஒருமையில் பேசுவது அவருடைய பதவிக்கு அழகல்ல என்று ஸ்டாலின் விமர்சித்தார்.
சென்னை ராயபுரம் தொகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கடந்த முறை ராயபுரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி தவறு செய்துவிட்டோம் என தெரிவித்தார். அமைச்சர் ஜெயக்குமார் எங்கு போட்டியிட்டாலும் தோற்பது உறுதி என்றும் கூறினார்.
இந்நிலையில், வரும் 29ஆம் தேதி திருவண்ணாமலையில் இருந்து சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை ஸ்டாலின் தொடங்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் நடக்க உள்ள இந்த பிரசாரத்தில் ஒரு நாளைக்கு 6 முதல் 8 தொகுதிகளில் இரண்டு பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜனவரி 26ஆம் தேதியன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். வரும் 29ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், அதில் விவாதிக்கப்பட வேண்டிய தமிழக பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.