Home » News » Politics » TAMILNADU ASSEMBLY ELECTION 2021 UNGAL TENKASI VJR

உங்கள் தொகுதி : காங்கிரஸ் கோட்டையாக இருந்த தென்காசி..! ஆனால் தற்போது..?

உங்கள் தொகுதி... அறிந்தும் அறியாததும் தொகுப்பில் இன்று நாம் பார்க்கப்போகும் சட்டமன்றத் தொகுதி தென்காசி... புதிய மாவட்டமாக உதயமாகியுள்ள தென்காசியின் சிறப்புகள் பற்றியும் இங்கு ஆதிக்கம் செலுத்துவது எந்த கட்சி என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • Share this:
மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகைச் சாரலில் லயித்துக் கிடக்கும் நகரம் தென்காசி. பாண்டியர்களின் கட்டடக் கலைக்கு சான்றாய் ஐநூறு ஆண்டுகளுக்கும் கம்பீரமாய் நிற்கும் காசி விஸ்வநாதர் ஆலயம் தென்காசியின் அடையாளம்...காசியை தரிசிக்க முடியாதவர்கள் தென்காசி விஸ்வநாதரை தரிசித்தால் அதற்கான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை... தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும் என திரிகூட ராசப்பக் கவிராயர் கவிச்சாரல் தூறிய குற்றாலத்தைக் கொண்ட தொகுதி... பிரதான அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, தேனருவி, புலியருவி, செண்பகாதேவி அருவி என திரும்பும் திசையெல்லாம் அருவிகள் கொட்ட, குற்றாலச் சாரலில் குளித்து மகிழ ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்... ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் களை கட்டும் குற்றால சீசனை நம்பி ஏராளமான விடுதிகள் குற்றாலத்திலும், தென்காசியிலும் உண்டு... குற்றால அருவிகளில் வழிந்தோடும் நீரால் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. அக்கட்சியின் வேட்பாளர்கள் 7 முறை வெற்றி பெற்றுள்ளார்கள். அதற்கு அடுத்தபடியாக அதிமுக 3 முறையும், திமுக 2 முறையும் வென்றுள்ளன. சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அதிமுக கூட்டணியில் 2011ம் ஆண்டு இத்தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டசெல்வமோகன்தாஸ் பாண்டியன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பழனியை வெறும் 462 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். செல்வமோகன்தாஸ் 86,339 வாக்குகள் பெற்ற நிலையில், பழனிக்கு 85,877 வாக்குகள் கிடைத்தது.




ராமநதி - ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது தென்காசி தொகுதி மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அதேநேரம் ஆட்சியர் அலுவலகம் உள்பட மாவட்டத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகளை விரைந்து ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் மக்கள். தென்காசி - நெல்லை 4 வழிச்சாலை திட்டம், குடிநீர் பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்கும் தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்திருந்தாலும் 29 ஆண்டுகளாக அந்த கட்சி வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் காங்கிரஸ் வெற்றிக்கொடி நாட்டுமா... அதிமுகவே தொகுதியை தக்க வைக்குமா.. விடையோடு வரப்போகிறது சட்டமன்றத் தேர்தல். 
First published: January 12, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading