HOME»NEWS»POLITICS»tamilnadu assembly election 2021 rahul gandhi campaign vjr

படுகர் இன மக்களுடன் நடனம், தேநீர் கடையில் டீ... தமிழகத்தில் ராகுல் காந்தி உற்சாக பரப்புரை

தமிழகத்தின் எதிர்காலத்தை ஆர்.எஸ்.எஸ் தலைமை முடிவு செய்ய அனுமதிக்க கூடாது என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

படுகர் இன மக்களுடன் நடனம், தேநீர் கடையில் டீ... தமிழகத்தில் ராகுல் காந்தி உற்சாக பரப்புரை
ராகுல் காந்தி பரப்புரை
  • Share this:

தமிழகத்தில் 3 நாட்கள் பரப்புரை மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவைக்கு ராகுல்காந்தி சனிக்கிழமை வந்தடைந்தார். "தமிழகத்தின் பண்பாடு காக்க, தமிழகத்தை மீட்க வாங்க... ஒரு 'கை' பார்ப்போம் என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை அவர் தொடங்கினார். ராகுலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் வாத்தியங்கள் முழங்க நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை சித்ரா பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி தமிழ்மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை இரண்டாம் தரமாக கருதுவதாக விமர்சித்தார். தமிழக மக்கள் தற்போது புதிய அரசை விரும்புவதாகவும், அவர்கள் விரும்பும் அரசை அமைத்து தரவே தாம் தமிழகம் வந்துள்ளதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து காளப்பட்டியில், தொழில் முனைவோருடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறினார்.



பின்னர் திருப்பூர் மாவட்டத்துக்கு செல்லும் வழியில் சின்னியம்பாளையத்தில் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த வேனில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல், தமிழகத்தின் எதிர்காலத்தை ஆர். எஸ். எஸ் தலைமை முடிவு செய்ய அனுமதிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

பின்னர் அவிநாசி செல்லும் வழியில் கருமத்தம்பட்டி பகுதியில் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. படுகர் இன மக்கள் நடனமாடியதைக் கண்ட ராகுல், வாகனத்தில் இருந்து இறங்கி, அவர்களுடன் சிறிது நேரம் நடனமாடினார்.

தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், அனுப்பர் பாளையம் பகுதிக்கு சென்ற ராகுல்காந்தி அங்குள்ள கடையில் கட்சி நிர்வாகிகளுடன் தேநீர் அருந்தினார்.  சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் நினைவகத்துக்கு சென்ற ராகுல்காந்தி அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Published by:Vijay R
First published: