மதிமுக Vs தமாகா: ஒரு தலைகீழ் திருப்பம்

வைகோ - ஜி.கே.வாசன்

தனது கட்சியே உண்மையான திமுக என்றும், உதயசூரியன் சின்னம் தனக்கே சொந்தம் என்றும் உரிமை கோரினார் வைகோ.

  • Share this:
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் வைகோ தலைமையிலான மதிமுகவுக்கும் ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகாவுக்கும் திருப்பத்தைத் தந்திருக்கிறது. ஆனால் அந்தத் திருப்பம் சராசரியான திருப்பம் அல்ல, ஒரு தலைகீழ் திருப்பம்!

தொண்ணூறுகளில் மத்தியில் திமுகவிலிருந்து வைகோ நீக்கப்பட்டிருந்த தருணம் அது. தனது கட்சியே உண்மையான திமுக என்றும், உதயசூரியன் சின்னம் தனக்கே சொந்தம் என்றும் உரிமை கோரினார் வைகோ. விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் சென்றது. கருணாநிதி தரப்பு ஒருபக்கமும், வைகோ தரப்பு மறுபக்கமுமாக நின்று திமுகவுக்கும் உதயசூரியனுக்கும் உரிமை கொண்டாடினர்.

அப்போது தங்கள் பிரிவே உண்மையான திமுக என்று சொல்லி பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆதாரமாகக் கொடுத்தது கருணாநிதி தரப்பு. வைகோ தரப்பில் 447 உறுப்பினர்களின் கையெழுத்துகள் அடங்கிய பட்டியலின் நகல் தரப்பட்டது.

அப்போதைய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் இருதரப்பு ஆதாரங்களையும் பரிசீலித்து, கருணாநிதி பிரிவே உண்மையான திமுக என்றும் அந்தப் பிரிவுக்கே உதயசூரியன் சின்னம் என்றும் தீர்ப்பளித்தார். அதன்பிறகு மதிமுக என்ற தனிக்கட்சியை உருவாக்கி, குடை சின்னத்தில் தேர்தல் களம் கண்டார் வைகோ.

அந்த நிகழ்வு நடந்து கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. தற்போது 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவின் ஆறு வேட்பாளர்களும் தனிச்சின்னத்தில் நிற்காமல், எந்தத் திமுகவுக்கு எதிராக குடை சின்னத்திலும் பம்பரம் சின்னத்திலும் போட்டியிட்டார்களோ அதே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். மதிமுகவின் வரலாற்றில் இதுவொரு தலைகீழ் திருப்பம்.

அதே தொண்ணூறுகளின் மத்தியில் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் கட்சி உருவானது. அதன் பெயர், தமிழ் மாநில காங்கிரஸ். 1996 பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது என்ற ஒரே காரணத்துக்காக அந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜி.கே.மூப்பனார், அதே வேகத்தில் ப.சிதம்பரம் உள்ளிட்டோருடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார்.

பிறகு திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தமாகா, சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அந்தத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்துவதற்கு தமாகா ஒரு மிகப்பெரிய அரசியல் கருவி.

அந்த வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்து கால் நூற்றாண்டு ஆகிவிட்ட நிலையில், இன்று 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகாவின் ஆறு வேட்பாளர்களும் தனிச்சின்னத்தில் நிற்காமல், எந்த அதிமுகவை எதிர்த்து தமாகா உருவானதோ அதே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். தமாகாவின் வரலாற்றில் இதுவொரு தலைகீழ் திருப்பம்.

ஆம், அரசியல் என்பது திருப்பங்களின் தொகுப்பு.
Published by:Vijay R
First published: