Exclusive : குடிக்கவே தண்ணீர் இல்லை, வாஷிங் மெஷினை வைத்து என்ன செய்வது? பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளாசல்

Exclusive : குடிக்கவே தண்ணீர் இல்லை, வாஷிங் மெஷினை வைத்து என்ன செய்வது? பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளாசல்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

10 வருடம் கையில் இருந்த சக்தியை பயன்படுத்தாமல் நாங்கள் அறிவித்த பின்பு அறிவித்த அவர்கள் தான் காப்பி அடித்தவர்கள்.

  • Share this:
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

செய்தியாளர் : இரண்டாவது முறையாக மதுரை மத்திய தொகுதியில் களம் காண்கிறீர்கள்... வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பி.டி.ஆர் :  கடந்த தேர்தலில் இல்லாத அளவிற்கு இந்த முறை திமுக அலை எழுந்திருக்கிறது. மக்களிடம் வரவேற்பு சிறப்பாக உள்ளது. வெற்றி எளிதாக இருக்கும்.

செய்தியாளர் : கடந்த ஐந்தாண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை தொகுதியில் செயல்படுத்தி உள்ளீர்கள். அடுத்த ஐந்தாண்டிற்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

பி.டி.ஆர் :  ஜனநாயகம் 100 சதவிகிதம் நிலைநாட்டப்பட வில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. அதனால் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை. ஆளுங்கட்சிக்கு அதிகமான அதிகாரமும் எதிர்க்கட்சிகளுக்கு எதுவும் இல்லாமல் இருக்கும் நிலைமை உள்ளது. அடுத்த முறை ஆளும் கட்சி உறுப்பினராக வந்தால் இதை விட பத்து மடங்கு செய்வேன். ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

செய்தியாளர் : மகளிருக்கு 1,500 ரூபாய், ஆண்டிற்கு 6 சிலிண்டர், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை இப்படி பல திட்டங்கள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று உள்ளன. இதை சாத்தியமாக்க முடியும் என நினைக்கிறீர்களா?

பி.டி.ஆர் :  அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள திட்டம் எல்லாம் முக்கியமென்றால் இதை ஏன் ஆட்சியில் இருந்த போது செயல்படுத்தவில்லை. எதிர்க்கட்சிகள் செய்யாததை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லலாம். ஆனால், ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் வந்தால் நாங்கள் இதை செய்வோம் என சொல்வது நம்பிக்கை இழந்த ஒரு செயல்.

கேஸ் சிலிண்டர் கொடுப்போம் என்று ஒரு புறம் சொல்லிவிட்டு, சோலார் அடுப்பு தருவோம் என்றும் சொல்கிறார்கள் இது முரணாக உள்ளது. பல இடங்களில் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை ஆனால் வாஷிங் மெஷினை வைத்து என்ன செய்வது? வாஷிங் மெஷின் ஒரு மடத்தனமான திட்டம்.

தேர்தல் அறிக்கையில் உள்ள பல திட்டங்கள் கொரோனா காலத்தில் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டியவை.  அப்போதெல்லாம் எதையும் செய்யாதவர்கள் மீண்டும் வந்தால் செய்வேன் என்று சொல்பவர்கள் வார்த்தைகள் மக்களிடம் ஒரு சதவீதம் கூட எடுபடாது.

செய்தியாளர் : இதே போல குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய், கல்விக்கடன் தள்ளுபடி சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்டவற்றை திமுகவும் அறிவித்துள்ளது... இதை எப்படி சாத்தியம் ஆக்குவீர்கள்?

பி.டி.ஆர் : சமூகநீதி எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு பொருளாதார ஏற்றத் தாழ்வையும் சீர் செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்பதே நோக்கம்.

சரியான நபர்களுக்கு சரியான பொறுப்பைக் கொடுத்து செயல்படுத்துவதற்கான திட்டத்தை தலைவர் ஸ்டாலின் வைத்திருப்பார் என்று நான் நம்புகிறேன்.

செய்தியாளர் : பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சீர் செய்யும் நோக்கம் ஒரு புறம் இருக்கையில், இலவச திட்டங்களால் அதை பூர்த்தி செய்ய முடியுமா?

பி.டி.ஆர் : இலவசம் என்று சொல்வது தவறான வார்த்தை. எல்லா நாடுகளிலும் ஏதோ ஒன்றை விலையில்லாமல் வழங்குகிறார்கள். அமெரிக்காவில் படிப்பிற்கு கட்டணமில்லை, அதை இலவசம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஏழை எளிய மக்களுக்கு தேவையான பொருட்களை கொடுப்பது இலவசம் என்று சொல்வது தவறு.

மதிய உணவு கொடுப்பது உலகத்திலேயே மிகச் சிறந்த திட்டம். அது இலவசம் இல்லை. மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுப்பது இலவசம் அல்ல, அது அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கான முதலீடு.

செய்தியாளர் : கூட்டுறவு நகைகடன் தள்ளுபடி, கலைஞர் உணவகம் போன்ற பல திட்டங்களை திமுக காப்பி அடித்து விட்டதாக கூறுகிறார்களே?

பி.டி.ஆர் : 10 வருடம் கையில் இருந்த சக்தியை பயன்படுத்தாமல் நாங்கள் அறிவித்த பின்பு அறிவித்த அவர்கள் தான் காப்பி அடித்தவர்கள்.

செய்தியாளர் : தமிழக அரசின் கடன் சுமை 5 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ள நிலையில், இந்த இலவச திட்டங்கள் மேலும் கடன் சுமையை அதிகரிக்காதா? இதை எப்படி கையாள்வீர்கள்?

பி.டி.ஆர் : கடன் சுமை அதிகரிப்பு என்பது வருவாய் கையாள்வதில் உள்ள சிக்கலின் வெளிப்பாடு. வருவாயை கையாளுதலில் ஏற்பட்ட தவறின் காரணமாகவே இந்த நிலை. கடன் சுமை அதிகரித்து இருப்பதால், கடன் வாங்கி வட்டி கட்ட வேண்டிய நிலை உள்ளது. 2021 - 2022 ஆம் நிதி ஆண்டில் 42,000 கோடி ரூபாய் வட்டி கட்டவேண்டும் என்பது எதிர்பார்ப்பு.

பொருளாதாரத்தை மீட்பதற்காக தமிழக அரசு அமைத்த கமிஷன் அறிக்கை கொடுத்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அது வெளியாகவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என சிஏஜி அறிக்கையில் சொல்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் உறுதியாக இதை மாற்றுவோம்.

 
Published by:Vijay R
First published: