தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் பழனிசாமி

கடலூர் தொகுதி வேட்பாளரான அமைச்சர் எம்.சி.சம்பத்தை ஆதரித்து, மஞ்சகுப்பம் பகுதியில் பரப்புரை செய்தார்.

  • Share this:
    வரும் சட்டமன்ற தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் என்று முதலமைசர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    கடலூர் மாவட்டம், புவனகிரியில் அதிமுக வேட்பாளர் அருண்மொழியைதேவனை ஆதரித்து முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மு.க.ஸ்டாலினுக்கு தனி அடையாளம் கிடையாது. கருணாநிதியின் மகன் என்ற அடையாளத்திலேயே செயல்பட்டு வருவதாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து போய் முதல்வரானதாக எதிர்க்கட்சியினர் கிண்டலடித்துவரும் நிலையில், "ஊர்ந்தெல்லாம் போகவில்லை நடந்து போய் பதவி ஏற்றுக்கொண்டேன்" என்றும், கூறினார்.

    நெய்வேலி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஜெகனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் சட்டத்தை முழுமையாக தெரியாதவர் ஸ்டாலின் என விமர்சித்தார். தான் எவ்வளவு வெயில் அடித்தாலும் நிற்பேன் எனவும், திமுக தலைவர் ஸ்டாலின் நிற்பாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து குறிஞ்சிபாடியில் அதிமுக வேட்பாளர் ராமஜெயத்திற்கு ஆதரவு திரட்டி பேசிய முதலமைச்சர், விலை வீழ்ச்சியடையும் போது விவசாயம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அதிமுக ஆட்சியின் நோக்கம் என்றார். மு.க.ஸ்டாலினிடம் விஷயம் இல்லாததால் எப்போதும் தன்னை பற்றியே அவதூறு பரப்பி வருவதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

    கடலூர் தொகுதி வேட்பாளரான அமைச்சர் எம்.சி.சம்பத்தை ஆதரித்து, மஞ்சகுப்பம் பகுதியில் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மூலம் இந்த ஆண்டு 430 க்கும் மேற்பட்டோர் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு 600 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் பெருமிதம் தெரிவித்தார். எப்போதும் தர்மம் வென்றதாக சரித்திரம் உண்டு என்றும் அதிமுகவின் பக்கம் தர்மம் இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

    விருத்தாசலம் தொகுதி பாமக வேட்பாளர், திட்டக்குடி தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி விருத்தாசலத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வரவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதாகவும், அதிமுக அரசு யாருக்கும் அடிபணிந்து செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார். ஆனால், மு.க.ஸ்டாலின் பச்சோந்தி போல உடனுக்குடன் நிறம் மாறுபவர் என்று விமர்சித்தார்.

     
    Published by:Vijay R
    First published: