சுற்றுலாவுக்குப் பிரசித்திப் பெற்ற தென்காசி சட்டமன்ற தொகுதி நிலவரம்

சுற்றுலாவுக்குப் பிரசித்திப் பெற்ற தென்காசி சட்டமன்ற தொகுதி நிலவரம்

புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு தென்காசி முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.

புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு தென்காசி முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.

  • Share this:
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து 2019-ம் ஆண்டு தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளால் பச்சைப்பசேல் என பசுமை போர்த்திய பகுதியாகத் தான் தென்காசியை பார்க்க முடியும். தென்காசிக்கு சிறப்பு சேர்ப்பது குற்றாலம் அருவி. பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பாலருவி, புலியருவி, பழந்தோட்ட அருவி, சென்பகாதேவியருவி, பழையகுற்றால அருவி, மற்றும் தேனருவிகளில் தென்மேற்கு பருவக்காலத்தில் நீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

ஜூன் மாதங்களில் தமிழகம் முழுவதும் கத்திரிவெயிலின் தாக்கம் இருந்தாலும் தென்காசி வீதிகளில் குற்றாலச் சாரல் வீசும். கத்திரி வெயிலே கண்ணாம்மூச்சி ஆடும். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து குற்றால அருவியில் நீராடுவதற்காக சுற்றுலா பயணிகள் வந்து குவிக்கின்றனர். காசி விஸ்வநாதர் ஆலயம் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகும்.

குற்றாலம்


தென்காசி சட்டமன்ற தொகுதி வீரகேரளம்புதூர் தாலுகா, தென்காசி தாலுகாவின் ஒரு பகுதி, தென்காசி நகராட்சி, சுந்தரபாண்டியபுரம், இலஞ்சி, மேலகரம், குற்றாலம் 4 பேரூராட்சிகள், 15 ஊராட்சிகளை உள்ளடக்கியது தென்காசி தொகுதியாகும்.

வாக்காளர் எண்ணிக்கை

ஆண் வாக்காளர்கள்   :                             1,38,843 பேர்

பெண் வாக்காளர்கள் :                              1,43,873  பேர்

மூன்றாம் பாலின வாக்காளர்கள்:                 15 பேர்

மொத்தம்                                                        2,82,231   வாக்காளர்கள் உள்ளனர்

தேர்தல் வரலாறு

தென்காசி தொகுதியை பொருத்தவரை தமிழகத்தில் நடந்த முதல் தேர்தல் 1952 - 2016 வரை நடைபெற்ற 15 தேர்தல்களில் காங்கிரஸ் 7 முறை, தி.மு.க 2 முறை, அ.தி.மு.க 3 முறை, த.மா.கா, சமத்துவ மக்கள் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 2006 தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கருப்பசாமிபாண்டியனும், 2011-ல் அ.தி.மு.க கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் சரத்குமாரும், 2016-ல் அ.தி.மு.க வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் வெற்றி பெற்றனர்.

தென்காசி ரயில் நிலையம்


2016 தேர்தல் நிலவரம்

கடந்த  2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் 86,339 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 85,877 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தப்படியாக பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் செல்வி 11,716 வாக்குகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்லஸ் 7,324 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முத்துக்குமார் 2,898 வாக்குகள் பெற்றுள்ளனர்.தொழில்

இந்த தொகுதியை பொருத்தவரை  விவசாயமே  பிரதான தொழிலாக இருக்கிறது. குறிப்பாக காய்கறி உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது. உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான குற்றாலம், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் ஆலயம் இருப்பதால் இந்த தொகுதி சுற்றுலா மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலும் நடைபெறுகிறது.

தென்காசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு நீண்ட கால கோரிக்கை கடந்த 22.11. 2019ம் ஆண்டு 33வது புதிய மாவட்டமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் துவங்கப்பட்டது. இந்த தொகுதியை பொறுத்தவரை 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ராமநதி, ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டம், புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

தென்காசி


மக்களின் கோரிக்கை

தென்காசி சட்டமன்ற தொகுதியில் புதியதாக துவங்கப்பட்ட மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக கட்டிடம், மாவட்ட காவல்துறை அலுவலகம், மற்றும் துறை சார்ந்த அலுவலக கட்டிடங்கள் அமைக்க வேண்டும் மேலும் அரசு மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி அமைக்க வேண்டும்.

தென்காசி நெல்லை நான்கு வழி சாலை போக்குவரத்து பல ஆண்டு காலமாக கிடப்பில் உள்ளதை விரைந்து செயல்படுத்தவும் இதனால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தப்பிரச்னைக்கு தீர்வு காண நான்கு வழி சாலை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேளாண்மை பொருட்களை பதப்படுத்திட கிடங்கு அமைத்திட வேண்டும். தென்காசி நகர பகுதியில் குடிநீர் தேவை நிறைவேற்றபடாமல் உள்ளதால் அதையும் நிறைவேற்ற வேண்டும் என்பது தென்காசி சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான கோரிக்கையாக உள்ளது. எனவே எதிர் வரும் தேர்தலில் வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்று தருவார்களா என காத்து  நிற்கின்றனர்.

செய்தியாளர் - செந்தில்


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: