TNAssemblyElection2021 | பவானிசாகர் தொகுதி ஒரு பார்வை

TNAssemblyElection2021 | பவானிசாகர் தொகுதி ஒரு பார்வை

2011ம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை சத்தியமங்கலம், பவானிசாகர் என இரு தொகுதிகளாக இருந்ததை, தொகுதி சீரமைப்பிற்கு பிறகு 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஒன்றுபட்ட பவானிசாகர் (தனி) தொகுதியாக மாறியது.

2011ம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை சத்தியமங்கலம், பவானிசாகர் என இரு தொகுதிகளாக இருந்ததை, தொகுதி சீரமைப்பிற்கு பிறகு 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஒன்றுபட்ட பவானிசாகர் (தனி) தொகுதியாக மாறியது.

  • Share this:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில், தமிழகத்தின் இரண்டாவது பெரிய மண் அணையான பவானிசாகர் அணை உள்ளது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையை நம்பி 2,07,000 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எழுந்தருளிய புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில், அனைத்து வனவிலங்குகள் வாழும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சுதந்திரத்திற்கு முன்பே ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்ட 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை, மாமன்னர் திப்பு சுல்தான் வாழ்ந்த இடங்கள், சந்தன கடத்தல் வீரப்பன் இருப்பிடங்கள் என பல்வேறு சிறப்புகளை தாங்கியது பவானிசாகர் தொகுதி.

2011ம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை சத்தியமங்கலம், பவானிசாகர் என இரு தொகுதிகளாக இருந்ததை, தொகுதி சீரமைப்பிற்கு பிறகு 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஒன்றுபட்ட பவானிசாகர் (தனி) தொகுதியாக மாறியது.சத்தியமங்கலம் தொகுதியாக இருந்த போது காங்கிரஸ் கட்சி ஒரு முறையும், தி.மு.க 4 முறையும், அ.தி.மு.க 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முதன்முறையாக சத்தியமங்கலம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

தொகுதி சீரமைப்புக்கு பிறகு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பவானிசாகர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பி.எல்.சுந்தரம் வெற்றி பெற்றார்.  2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, பவானிசாகர் தொகுதியின் எம்.எல்.ஏவாக அ.தி.மு.கவின்  ஈஸ்வரன்  தற்போது உள்ளார்.

வாக்காளர்கள் எண்ணிக்கை

ஆண் வாக்காளர்கள்                              124430

பெண் வாக்காளரகள்                             129461

மூன்றாம் பாலின  வாக்காளர்கள்                5

மொத்தம்                                                          253946   வாக்காளர்கள் உள்ளனர். தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள பழங்குடியினர், லிங்காயத்து, முஸ்லிம் வகுப்பினரே வெற்றியை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர்.

மக்களின் கோரிக்கைகள்

கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையாளி இன மக்களுக்கு மலையாளி ST சான்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 35 ஆண்டு காலமாக உள்ளது. ஆனால் இதுவரை இக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளதால், அவர்களது சான்றிதழ்களில் இதர வகுப்பினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி, வேலை வாய்ப்பு, வங்கி கடன்கள், தள்ளுபடி போன்ற ஏராளமான சலுகைகள் அனைத்தும் கிடைக்காமல் போவதாக கூறுகின்றனர்.தாளவாடி மலைப்பகுதி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை அங்குள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக தாளவாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை இறந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனை செய்து வந்தனர். ஆனால் மருத்துவர் பற்றாக்குறையின் காரணமாக இறந்தவர்களின் உடல்களை கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அல்லது 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்தியமங்கலத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

தாளவாடி ஒன்றியத்தில் உள்ள 10 பஞ்சாயத்துகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் யாரும் பணியாற்றுவதில்லை. மலைவாழ் மக்கள் துன்பத்திற்கு ஆளாவதாக வேதனை தெரிவிக்கின்றனர். 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மக்களுடைய வாழ்வாதாரம் என்பது வனத்திற்குள் சென்று இலவசமாக சிறுவன மகசூலில் ஈடுபடுவது, நெல்லிக்காய், கடுக்காய், சீமார்புல் சேகரித்து அதனை தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தி வந்தனர். அதனை நீண்ட காலமாக வனத்துறையினர் தடுத்து வருகின்றனர். மாடு மேய்க்க கூடாது, ஆடு மேய்க்க கூடாது, சிறுவன மகசூல் சேகரிக்கக் கூடாது என தொடர்ந்து மலைவாழ் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். காலம் காலமாக வாழ்வாதாரத்திற்காக வனத்திற்குள் சென்று வந்த மலைவாழ் மக்களை தடுக்கக் கூடாது என வேண்டுகோள் வைத்துள்ளனர்.பவானிசாகர் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட காகித ஆலைகள் வெளியேற்றும் கழிவு நீரை, சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக அப்படியே வெளியேற்றுவதால், ராஜன் நகர், புதுப்பீர்கடவு, தத்தப்பள்ளி, கொக்கரகுண்டி  உள்ளிட்ட 25 கிராமங்களில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்து, பவானி ஆற்று நீர் விஷமாக மாறி வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். கால்நடைகள் மலட்டுத்தன்மை அடைந்துள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் குறுகலாக உள்ளதால்  அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிறது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் குடிநீர், உணவின்றி தவித்து போகின்றனர். அரசு நிர்ணயித்த 16 டன் எடை அளவு கொண்ட வாகனங்களில் செல்ல வேண்டும் என்ற விதி இருந்தும் வடவள்ளி மற்றும் ஆசனூர் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள வாகன எடை சோதனை நிலையங்கள் செயல்படாமல் இருக்கின்ற காரணத்தினால் தான் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றது எனவும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மக்களின் எதிர்பார்ப்புகள்

சத்தியமங்கலம், பவானிசாகர் தாண்டாம்பாளையம், இக்கரை நெகமம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகை பூ, தமிழகம் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மட்டுமின்றி துபாய், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சத்தியமங்கலம் மல்லிகை பூவுக்கு என தனி மவுசு இருக்கின்ற நிலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள மல்லிகை பூவுக்கு என அரசின் சார்பில் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

நகர பகுதியில் சாலை மற்றும் சாக்கடை வசதிகள் போன்ற சில அடிப்படை வசதிகள் மட்டுமே நடைபெற்றிருக்கும் நிலையில், பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் மேற்கூறிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே  வாக்காளர்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் : தினேஷ்,


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: