• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • TNAssemblyElection2021 | 133 வாக்குகளுக்காக தனிவாக்குச்சாவடி- அந்தியூர் தொகுதி ஒரு அலசல்

TNAssemblyElection2021 | 133 வாக்குகளுக்காக தனிவாக்குச்சாவடி- அந்தியூர் தொகுதி ஒரு அலசல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி குறித்து பார்ப்போம்.

  • Share this:
    ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்கள் அதிகம் நிறைந்த அந்தியூர் தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். ஒரு சில பகுதிகளில் விசைத்தறி மற்றும் கைத்தறித் தொழிலும் நடைபெறுகிறது. பரவலாக செங்கல் உற்பத்தி தொழிலும் நடைபெறுகிறது. இத்தொகுதியில் 30 சதவிகிதம் மலைப்பகுதிகளாக உள்ளது.

    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில், குருநாதசாமி கோயில் சிறப்பு வாய்ந்தவை. குருநாதசாமி கோயில் திருவிழாவை முன்னிட்ட நான்கு நாள்கள் நடைபெறும் கால்நடைச் சந்தை தென்மாநில அளவில் புகழ்பெற்றது. இத்தொகுதியில், சோளகர், லிங்காயத்து, மலையாள மொழிப்பேசும் மக்கள் மலைப்பகுதியிலும், சமதளப் பகுதியில் கவுண்டர், வன்னியர் மற்றும் தலித் வாக்குகள் அதிகம் உள்ளது. செட்டியார், முதலியார் வாக்குகளும் கணிசமாக உள்ளது.



    தொகுதி நிலவரம் 

    அந்தியூர் தொகுதியில் ஏரிகள், நீர்நிலைகள் உள்ளதால், விவசாயத் தொழிலே அதிகம் நடைபெறுகிறது. மிகவும் பின்தங்கிய தொகுதியான இப்பகுதியிலிருந்து படித்த இளைஞர்கள், பெண்கள் வேலைக்காக திருப்பூர், பெருந்துறை சிப்காட் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் நிலையே உள்ளது.

    தேர்தல் வரலாறு 

    1962-ம் ஆண்டு முதல் 13 தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது. இதில், அ.தி.மு.க 7 முறையும், தி.மு.க 4 முறையும், பா.ம.க, காங்கிரஸ் தலா ஒரு முறையும் வென்றுள்ளன. தனித் தொகுதியாக இருந்த இத்தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின்போது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. இதையடுத்து, நடைபெற்ற இரு தேர்தல்களிலும் தொடர்ந்து அ.தி.மு.க-வே வென்றுள்ளது.

    தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்..

    கோபிசெட்டிபாளையம் வட்டம் (பகுதி) - புஞ்சைதுறைம்பாளையம், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை, சவுண்டப்பூர், அம்மாபாளையம், மேவானி, பெருந்தலையூர், கூகலூர், புதுக்கரை, நஞ்சைபுளியம்பட்டி, பொலவக்காளிபாளையம், கடுக்கம்பாளையம் மற்றும் சந்திராபுரம் கிராமங்கள்.



    பேரூராட்சிகள் : வாணிப்புதூர், கூகலூர், பி.மேட்டுப்பாளையம்.

    அந்தியூர் வட்டம் (பகுதி) - பர்கூர், கொமராயனூர், புதூர், சென்னம்பட்டி, எண்ணமங்கலம், சங்கராபாளையம், அந்தியூர், நகலூர், குப்பாண்டாம்பாளையம், பிரம்மதேசம், பச்சாம்பாளையம், கெட்டிசமுத்திரம், மாத்தூர், வெள்ளித்திருப்பூர், வேம்பத்தி, மூங்கில்பட்டி, கீழ்வானி மற்றும் கூத்தம்பூண்டி கிராமங்கள்

    பேரூராட்சிகள் : அந்தியூர் மற்றும் அத்தாணி.

    வாக்காளர்கள் எண்ணிக்கை  :

    ஆண் வாக்காளர்கள்                            - 1,07,712

    பெண்  வாக்காளர்கள்                        -  1,11,215

    மூன்றாம் பாலின வாக்குகள்        -           18

    மொத்தம்                                                      - 2,18,945 வாக்காளர்கள் உள்ளனர்.

    வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை :  261

    பதற்றமானவை : 32

    பர்கூர் மலைப்பகுதியில் 21 வாக்குச்சாவடிகளும் 13,340 வாக்குகளும் உள்ளன. தரைமட்டத்திலிருந்து சுமார் 850 அடி உயரத்தில் உள்ள கத்திரிமலை கிராமத்தில் 133 வாக்குகளுக்காக தனியே ஒரு வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது.



    இதுவரை வெற்றி பெற்றவர்கள் :

    1962 பெருமாள்ராசு (காங்கிரஸ்)

    1967 ஈ.எம்.நடராசன் (தி.மு.க)

    1971 ம.நடராசன்    ( தி.மு.க)

    1977 ப.குருசாமி  (அ.தி.மு.க)

    1980 ச.குருசாமி  (அ.தி.மு.க)

    1984  ப.மாதையன்  (அ.தி.மு.க)

    1989  வி.பெரியசாமி (அ.தி.மு.க) (ஜெ)

    1991  வி.பெரியசாமி  (அ.தி.மு.க)

    1996  ப.செல்வராசு  (தி.மு.க)

    2001  இரா.கிருட்டிணன்  (பா.ம.க)

    2006 எஸ்.குருசாமி  (தி.மு.க)

    2011 எஸ்.எஸ்.ரமணீதரன்  (அ.தி.மு.க)

    2016 கே.ஆர்.ராஜகிருஷ்ணன்  (அ.தி.மு.க)

     

    கடந்த 2016 தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் :

    கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அ.தி.மு.க) - 71,575

    ஏ.ஜி.வெங்கடாசலம் (தி.மு.க) - 66,263

    எஸ்.சி.ஆர்.கோபால் (பா.ம.க) - 11,570

    டி.ராஜா (கொ.ம.தே.க) - 5,995

    எம்.கே.ராஜா சம்பத் (தே.மு.தி.க) - 5,828

    கடந்த 2016 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் கே.ஆர்.ராஜாகிருஷ்ணன், தி.மு.க வேட்பாளரான ஏ.ஜி.வெங்கடாசலத்தைக் காட்டிலும் 5,312 வாக்குகள் முன்னிலை பெற்று வென்றி பெற்றார். கடந்த 2011 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளரான எஸ்.எஸ்.ரமணீதரன், தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான என்கேகே.பி.ராஜாவைக் காட்டிலும் 25,254 வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்றார்.



    பிரச்னைகள் :

    பரவலாகக் காணப்படும் குடிநீர் பிரச்னை, தொழில், நிறுவனங்கள் இல்லாததால் உள்ளூரில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லை. வேளாண்மை பிரதான தொழிலாக உள்ளதால் பிற தொழில்கள் வளர்ச்சியடையவில்லை. புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படவில்லை. அந்தியூர் பேரூராட்சியில் 10 நாள்களுக்கு ஒருமுறையே சுழற்சி முறையில் குடிநீர் வழங்கப்படுகிறது. நீர்பாசனத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

    5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள் : பரவலாக குடிநீர் பிரச்னையைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தியூர் - அம்மாபேட்டை சாலை விரிவாக்கம், பர்கூர் மலைபாதை விரிவாக்கம், புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

    மக்களின் எதிர்பார்ப்பு:

    புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். அந்தியூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். மணியாச்சி பள்ளம், வேதபாறை பாசனத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தியூர் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

    சாதி வாக்குகள் பலம்:

    அந்தியூர் தொகுதியில் அதிமுக, திமுக வாக்குகள் சமபலத்தில் உள்ளன. பாமகவின் வன்னியர் வாக்குகள் அதிமுகவுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. முதலியார், செட்டியார் மற்றும் தலித் வாக்குகள் கணிசமாக உள்ளது. கிராமங்கள் நிறைந்த தொகுதியாக உள்ளதால் கவுண்டர், வன்னியர் இனத்தைச் சேர்ந்தவரே வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மலைமக்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பவையாக உள்ளது.

    செய்தியாளர்: தினேஷ், அந்தியூர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: