ADMK - BJP : அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் சீட் எத்தனை?

ADMK -  BJP : அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் சீட் எத்தனை?

தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

  • Share this:
    அதிமுக கூட்டணயில் பாமக-விற்கு தொகுதிகள் ஒதுக்கீடு முடிவடைந்துள்ள நிலையில் தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுப்பறி தொடர்கிறது.

    தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடுக்கிவிட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏற்கனவே 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேமுதிகவுடன் நேற்று இரவு அமைச்சர் தங்கமணி இல்லத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தேமுதிக நிர்வாகிகள் அனகை முருகேசன், பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

    சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தேமுதிக தங்களுக்கு பாமகவுக்கு இணையாக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
    ஆனால் தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் வரை மட்டுமே அளிக்க அதிமுக முன்வந்துள்ளதால் தேமுதிகவினர் இன்று பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. அதேநேரத்தில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    இதேபோல், அதிமுக - பாஜக இடையேயான தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. நேற்று தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் போது பாஜக சார்பில் 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் 20 தொகுதி வரை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    Published by:Vijay R
    First published:

    சிறந்த கதைகள்