கட்சித் தொடங்குவதில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரம்.. காட்டமாக விமர்சிக்கும் அரசியல் பிரமுகர்கள்

கட்சித் தொடங்குவதில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரம்.. காட்டமாக விமர்சிக்கும் அரசியல் பிரமுகர்கள்

ரஜினிகாந்த்

கட்சித் தொடங்குவதில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வரும் நிலையில், பல்வேறு அரசியல் பிரமுகர்களும் அவரின் ஆன்மிக அரசியல் குறித்து, காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

  • Share this:
    கட்சித் தொடங்கி அரசியலில் ஈடுபட உள்ளதாக 2017ம் ஆண்டு அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் அதன் பின் மவுனம் சாதித்தார். நீண்ட ஆலோசனைக்கு பின், வரும் ஜனவரியில் கட்சித் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நேர்மையான, வெளிப்படையான ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம் என்றும், தமிழக அரசியல் வரலாற்றில் அற்புதம் நிகழப்போவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    கட்சித் தொடங்கும் முன்பே, ரஜினியின் அரசியல் பயணத்தை பல்வேறு அரசியல் பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் திருத்தணியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, 50 ஆண்டுகளாக தமிழக அரசியலில் இருக்கும் திராவிட இயக்கத்தை பிளவுபடுத்த சிலர் நினைப்பதாக குற்றம்சாட்டினார். தற்போது கட்சி தொடங்கியுள்ள நடிகர், நடிகைகள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது எங்கே போனார்கள் என்றும் வினவினார். 70 ஆண்டுகளாக ஜாலியாக இருந்துவிட்டு, தற்போது ஆன்மிக அரசியல் என்று களம் காணும் ரஜினியால், மாற்றத்தை கொண்டு வர முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

    ரஜினி பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரசிகனை சரியாக வழி நடத்தாத ரஜினி, நாட்டை எப்படி வழிநடத்துவார் என்றும் வினவினார்.

    ரஜினியை மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் சிலர் ஒப்பிடுவதை விமர்சித்த சீமான், எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தால் ரஜினியை ராமாபுரம் தோட்டத்தில் கட்டி வைத்து அடித்திருப்பார் என்றும் கூறினார்.

    அதிமுக, திமுக காத்து வந்த சமூகநீதியை ரஜினி மூலம் சிலர் அழிக்க முயற்சிப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம், தெரிவித்துள்ளார். சுயசிந்தனை இல்லாதவர்கள் தமிழ்நாட்டை மாற்றப்போவதாக பேசி வருவதாக ரஜினியை சூசகமாக விமர்சித்த சி.வி.சண்முகம், ஜூன் மாதத்துக்கு பின் ரஜினி பெரும் கேலி, கிண்டலுக்கு ஆளாவார் என்றும் கூறினார்.

    மேலும் படிக்க...முட்டை விலை 40 காசுகள் உயர்வு; ரூ.4.80க்கு விற்பனை

    அரசியல் பிரமுகர்களின் இத்தகைய விமர்சனங்களுக்கு மத்தியில், தமிழகத்தில் ஆன்மிக அரசியலை ரஜினி எப்படி வழிநடத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: