இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் உடனடியாக ராஜினாமா - சீமான் சூளுரை

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் உடனடியாக ராஜினாமா - சீமான் சூளுரை

சீமான்

நாம் தமிழர் ஆட்சியில் 60 வயதுக்கு மேல் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும், தமிழ் படித்தால்தான் வேலை கிடைக்கும் எனவும் கூறினார்

  • Share this:
    சட்டப்பேரவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். திருவொற்றியூர் தொகுதியில் தாம் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில், நாம் தமிழர் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், 117 ஆண் வேட்பாளர்கள் ,117 பெண் வேட்பாளர்கள் என 234 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சீமான், அரசியல் என்பது தொழிலாக மாற்றப்பட்டுள்ளதாகவும், சில குடும்பங்களின் சொத்தாக மாறியுள்ளதாகவும் விமர்சித்தார். யாருடனும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக கூறிய சீமான், தற்காலிக தோல்விகளுக்காக நிரந்தர வெற்றியை பலியிட விரும்பவில்லை என்றார்.

    தொடர்ந்து பேசிய சீமான், ஆணுக்கு பெண் சமம் என்பது தங்கள் கொள்கை அல்ல என்றும், ஆணும் பெண்ணும் சமம் என்பதே தங்கள் கொள்கை என்றும் கூறினார். நாம் தமிழர் ஆட்சியில் 60 வயதுக்கு மேல் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும், தமிழ் படித்தால்தான் வேலை கிடைக்கும் எனவும் கூறினார். மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால், உடனடியாக ராஜினாமா செய்வோம் என்றும் சூளுரைத்தார்.

    இதனைதொடர்ந்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய சீமான், திருவொற்றியூர் தொகுதியில் தாம் போட்டியிடுவதாக அறிவித்தார். கொளத்தூரில் போட்டியிட்டு ஒருவரைத் தோற்கடிப்பதை விட மக்களை காப்பதே முக்கியம் எனவும் சீமான் குறிப்பிட்டார். கொளத்தூர் வேட்பாளராக ஃபெலிக்ஸ் செல்வா அறிவிக்கப்பட்டார்.

    முன்னதாக கூட்டத்தில் பேசிய திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, இந்த மண்ணை மண்ணின் மைந்தன் ஆள வேண்டும் அல்லது மண்ணின் மகள் ஆள வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும், தற்போது இருளில் கிடக்கும் தமிழகத்திற்கு சீமான் மூலம் வெளிச்சம் வரும் எனவும் பாரதிராஜா கூறினார்.
    Published by:Vijay R
    First published: