• HOME
 • »
 • NEWS
 • »
 • politics
 • »
 • நான் ஆட்சிக்கு வந்தால்...கோரிக்கை நிறைவேறவில்லை எனில் முதல்வர் அறைக்கே வந்து கேட்கலாம்- ஸ்டாலின் உறுதி

நான் ஆட்சிக்கு வந்தால்...கோரிக்கை நிறைவேறவில்லை எனில் முதல்வர் அறைக்கே வந்து கேட்கலாம்- ஸ்டாலின் உறுதி

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் முதல் ஊழல் பட்டியல் கொடுக்கப்பட்டது. அடுத்ததாக 2-வது பட்டியல் விரைவில் கொடுக்கப்படும். நடவடிக்கை எடுக்காவிட்டாலும், திமுக ஆட்சிக்கு வந்ததும் தற்போதைய அமைச்சர்கள் சிறையில்தான் இருப்பார்கள்.

 • Share this:
  நான் ஆட்சி பொறுப்பேற்ற அடுத்தநாள், கோரிக்கை மனுக்கள் அடங்கிய புகார் மனு பெட்டி திறக்கப்படும். திறக்கப்பட்ட 100 நாட்களுக்குள் உங்கள் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  புதுக்கோட்டை மாவட்டம் உனையூரில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரசார நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:

  வெற்றிநடைப் போடும் தமிழகம் என விளம்பரம் செய்கிறார் முதல்வர் பழனிசாமி. இது வெற்றிநடை அல்ல, வெற்றுநடை. இது வளமான ஆட்சி தான். ஆனால் மக்களுக்கு அல்ல, அதிமுக அமைச்சர்களுக்கு மட்டுமே வளமான ஆட்சி. மற்றவர்களுக்கு தாழ்ந்த ஆட்சி தான். அனைத்து துறைகளிலும் ஊழல் வந்துவிட்டது. ரூ.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வைத்துள்ளனர்.

  தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் பாதுகாப்பான குடிநீர்கூடக் கிடைக்கவில்லை. அனைவருக்கும் தடையின்றிப் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக இந்தியாவிலேயே தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தைத் திமுகதான் கொண்டு வந்தது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, ஊழலாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.

  தமிழகத்தில் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் முதல் ஊழல் பட்டியல் கொடுக்கப்பட்டது. அடுத்ததாக 2-வது பட்டியல் விரைவில் கொடுக்கப்படும். நடவடிக்கை எடுக்காவிட்டாலும், திமுக ஆட்சிக்கு வந்ததும் தற்போதைய அமைச்சர்கள் சிறையில்தான் இருப்பார்கள்.

  கரோனாவிலும் ஊழல் செய்தவர் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். இவர் மீது குட்கா ஊழல், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ரூ.89 கோடி பணப் பட்டுவாடா செய்தது போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  தமிழகத்தில் கரோனாவால் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கோனார் இறந்ததற்கும் விஜயபாஸ்கர்தான் காரணம். ஏனெனில், தொடக்கத்தில் கரோனா பாதிப்பு வராது என்று சட்டப்பேரவையில் கூறினார். மரணத்தில் பொய் சொன்னவர்தான் விஜயபாஸ்கர்.

  தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளில் முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது ஊழல் வழக்கு குறித்து யோசித்தே 6 ஆண்டுகள் கழிந்தன. அவர் இறந்த பிறகு பதற்றமாகவே 4 ஆண்டுகள் கழிந்தனவே தவிர, மக்களைப் பற்றி இவர்கள் கவலைப்படவில்லை.

  10 ஆண்டுகளில் புதிய வேலைவாய்ப்பு, புதிய முதலீடு, மாநில உரிமை, நீட் தேர்வில் விலக்கு குறித்துக் கவனம் செலுத்தாமல், பணம் கிடைக்கும் திட்டங்களை மட்டுமே அவர்கள் தீட்டியதால், ரூ.5 லட்சம் கோடி கடனில் தமிழகம் மூழ்கடிக்கப் பட்டுவிட்டது.

  அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டாரம் முதல்வர் இது இமாலயப் பொய். 2வது விவசாய புரட்சி திட்டம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குதல், விவசாய கருவிகளை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுப்போம் என அறிவித்தீர்களே நிறைவேற்றிவிட்டீர்களா? இப்படி அவர்களின் பொய் வாக்குறுதிகளை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதல்வர் பொய் சொல்கிறார். வாய்க்கு வந்ததை பேசுவது, ஆளுக்கு தகுந்த மாதிரி நடிப்பது தான் அவரது வாடிக்கை.

  ஆனால் நான் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். அப்படி செய்யவில்லை என்றால் என்னிடம் நேரடியாக கேட்கலாம். நான் ஆட்சி பொறுப்பேற்ற அடுத்தநாள், கோரிக்கை மனுக்கள் அடங்கிய புகார் மனு பெட்டி திறக்கப்படும். திறக்கப்பட்ட 100 நாட்களுக்குள் உங்கள் பிரச்னைகள் தீர்க்கப்படும். பிரச்னைகளை சட்டரீதியாக தீர்க்க தனியாக துறை உருவாக்கப்படும். அதன்மூலம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். முடியாவிட்டால், நீங்கள் இதிலுள்ள பதிவு எண் கொண்ட அட்டையுடன் நேரடியாக முதல்வர் அறைக்கே வந்து கேட்கலாம்.

  இவ்வாறு பேசினார் ஸ்டாலின்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: