‘மு.க.ஸ்டாலின், தங்கை, மகன் குடும்பமே சேலத்தை சுற்றுகிறது ; இது அதிமுக கோட்டை’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நான் எவ்வளவோ கூட்டத்துக்கு போகிறேன் இங்கு வந்து உங்களை பார்த்த பிறகுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பெற்ற பலனை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.

 • Share this:
  சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ராஜாமுத்துவை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

  ஆட்டையாம்பட்டியில் உரையாற்றிய முதல்வர், “ மக்கள் தான் முதலமைச்சர். மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பது தான் என்னுடைய கடமை. திமுக தலைவர் ஸ்டாலின் கண்விழித்தால் போதும் நான் முதலமைச்சர் ஆகிவிடுவேன். முதலமைச்சர் ஆகிவிடுவேன் என 24 மணிநேரம் பேசி வருகிறார். நான் அப்படி அல்ல. நான் உங்களோடு பழகியவன். இந்த மேடையிலே உங்களோடு பேசியவன். இந்த ஊருக்கு பல முறை வருகை தந்துள்ளேன். யார் வேண்டுமானாலும் என்னுடைய வீட்டுக்கு வந்து தங்களுடைய குறைகளை கூறலாம். ஸ்டாலின் வீட்டு கேட்டை கூட தொட்டுப்பார்க்க முடியாது.

  நான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருக்கின்றவன். உங்கள் குடும்பத்தில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தினால் நீங்கள் எப்படி மகிழ்ச்சியடைவீர்களோ அந்த மகிழ்ச்சியோடு வாக்களியுங்கள். நான் எவ்வளவோ கூட்டத்துக்கு போகிறேன் இங்கு வந்து உங்களை பார்த்த பிறகுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பெற்ற பலனை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். பதவி என்பதுவேறு பாசம் என்பது வேறு. பாசத்தோடு உங்களைப் பார்க்கின்றேன். நான் எப்போதும் முதலமைச்சர் என்ற நிலையில் இருந்தது கிடையாது. உங்களின் ஒருவனாகத்தான் எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

  வீரபாண்டி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ராஜாமுத்துவுக்கு வாக்களியுங்கள். தார் சாலை, விபத்து ஏற்படுவதை அறிந்து நானே அடிக்கல் நாட்டி பாலத்தை திறந்து வைத்துவிட்டேன். நம்ம பகுதியில் நான் இருப்பதால் தான் இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குது. இந்த தொகுதி முழுவதும் எனக்கும் நமது வேட்பாளர் ராஜாமுத்துவுக்கு அத்துப்படி. ராஜாமுத்து பல ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றியவர் எளிமையான வேட்பாளர் இப்போது கழகத்தின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு வெற்றி வாய்ப்பை தாருங்கள்.

  தி.மு.க தலைவர் ஸ்டாலின் சேலம் மாவட்டத்துக்கு பலமுறை வந்து சென்றுள்ளார். அவர் மட்டுமல்ல அவருடைய மகனும் பலமுறை வந்து போய்விட்டார். அவரு மட்டுமல்ல அவருடைய சகோதரி திருமதி கனிமொழி, அவரும் பலமுறை வந்து சென்றுள்ளார். அந்த குடும்பம் முழுவதும் சேலம் மாவட்டத்தை சுற்றி சுற்றி வருகிறது. ஸ்டாலின் நீங்கள் எத்தனை முறை வந்தாலும் சரி உங்கள் தங்கை எத்தனை முறை வந்தாலும் சரி. உங்கள் மகன் எத்தனை முறை வந்தாலும் சரி. இந்த சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. இது தேர்தல் பிரச்சார கூட்டம் அல்ல. வெற்றி விழா கூட்டம் போல் மக்கள் காட்சியளிக்கின்றனர். ஆட்டையாம்பட்டியில் நடக்கும் கூட்டத்தை வந்து பாருங்கள் அ.தி.மு.க-வின் சக்தி என்னவென்று உங்களுக்கு தெரியும். என்றார்.
  Published by:Ramprasath H
  First published: