தியாகத்தால் ஆனதுதான் என் வாழ்க்கை, முதல்வர் பழனிசாமியின் வாழ்க்கையைப் பேசினால் தமிழகத்துக்கு அவமானம் - ஸ்டாலின் பேச்சு

மு.க. ஸ்டாலின்

இன்னும் 3 மாதங்கள் தான். பழனிசாமியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அதன் பின்னர் அமையக் கூடிய அரசு தான் உண்மையான, மக்களுக்கான, நீங்கள் விரும்பக்கூடிய, உங்கள் அரசாக அமையும்.

 • Share this:
  பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளதாகவும் தன் வாழ்க்கை தியாகத்தால் ஆனது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

  கோவில்பட்டியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தேர்தல் பிரச்சாரம் நடந்தது அதில் ஸ்டாலின் பேசியதாவது:

  இதுவரை இருந்த அரசுகளில் ஊழல் மலிந்த அரசு எது என்றால், 1991-96-ம் வரை நடந்த அதிமுக ஆட்சி தான். ஆனால், இப்போது அதையுத் தாண்டி ஊழல் செய்கின்ற அரசாக 2016-2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி மாறிவிட்டது.

  முதல்வர் பழனிசாமி முதல் அனைத்து அமைச்சர்களும் ஊழல் ஒன்றையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளனர். முதல்வர் பழனிசாமிக்கு எதிரான டெண்டர்வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது.

  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக துணை முதல்வர் மீதான வழக்கும் சிபிஐ வசம் ஒப்படைக்கலாமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது...

  இதுபோன்று முதல்வர் மீதும், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

  தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், கடைசி நேரத்தில் ரூ.2885 கோடிக்கு அவசர ஒப்பந்தம் விட்டுள்ளனர். ஒப்பந்ததாரர்கள் தயவு செய்து ஏமாற வேண்டாம்.

  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டு, புதிய ஒப்பந்தங்கள் விடப்படும். அதனால் கமிஷன் கொடுத்து ஏமாந்துவிட வேண்டாம். திமுக ஆட்சி வந்தவுடன் கமிஷன் எதுவுமில்லாமல் முறையாக நியாயமாக ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படும். ஊழலுக்காக ஊழல்வாதிகள் நடத்தக்கூடிய ஊழல் கேபினட் இது.

  நடிக்க வேண்டிய அவசியம் ஸ்டாலினுக்கு இல்லை. தேவையும் இல்லை. ஆட்சி முடியப்போவதால் விவசாயியாக நடிப்பது பழனிசாமி தானே தவிர நான் அல்ல. நான் உழைத்து தியாகம் செய்து அரசியலில் முன்னுக்கு வந்தது நாட்டு மக்களுக்கு தெரியும்.

  கோபாலபுரத்தில் 1966-ம் ஆண்டு இளைஞர் திமுகவில் அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். அன்றிலிருந்து தொடர்ந்து அரசியல் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். 1971-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் முரசே முழங்கு என்ற பிரச்சார நாடகத்தை நாடு முழுவதும் நடத்தி வெற்றிக்கு உழைத்தேன்.

  திருமணமான 5-வது மாதத்தில் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்த காரணத்தால் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது எனது வயது 23.

  இதுபோன்று எரி சாராய ஊழல் விசாரித்த கைலாசம் ஆணையத்தை எதிர்த்துப் போராட்டம், திமுக சட்டமன்ற அலுவலகத்தை காலி செய்ய நடந்த அராஜகத்தை கண்டித்து போராட்டம், சென்னை குடிநீர் பஞ்சம் போக்காத அதிமுக அரசை கண்டித்து போராட்டம் எனப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளேன்.

  மொழிப்போர் போராட்டத்தில் என் மீது பொய் வழக்கு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டேன்.

  இப்படி தியாகத்தால் ஆனது தான் ஸ்டாலின் வாழ்க்கை. பழனிசாமியின் வாழ்க்கை வரலாற்றைப் பேசினால் தமிழகத்துக்கு அவமானம். என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. அடிமைப்படுத்த முடியாது என பழனிசாமி சொல்கிறார்.

  இதனை அவர் டெல்லிக்கு சென்றபோது சொல்லியிருந்தால் பாராட்டலாம்.

  தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டு, பாஜகவின் பாதத்தை தாங்கிக்கொண்டுள்ள பழனிசாமிக்கு இதுபோன்ற வாய்சவடால், வசனங்கள் பேசுவதற்கு உரிமையே கிடையாது...

  இன்னும் 3 மாதங்கள் தான். பழனிசாமியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அதன் பின்னர் அமையக் கூடிய அரசு தான் உண்மையான, மக்களுக்கான, நீங்கள் விரும்பக்கூடிய, உங்கள் அரசாக அமையும்.

  என்று பேசினார் ஸ்டாலின்.
  Published by:Muthukumar
  First published: