முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா? ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசனுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

அ.தி.மு.க.ன் முன்னாள் தலைவி ஜெயலலிதாவினால், பையனுரில் பங்களா கட்ட கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட பஞ்சமி நிலத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ராமதாஸுடன் இணைந்து செயல்பட்டால் ஏதாவது பலனாவது கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா? ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசனுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: October 23, 2019, 7:12 PM IST
  • Share this:
பா.ம.க நிறுவனர் ராமதாஸின் கைப்பாவையாக பா.ஜ.க மாநிலச் செயலாளர் சீனிவாசன் மாறியுள்ளார் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

முரசொலி பத்திரிக்கை அலுவலக கட்டடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். அவரைத் தொடர்ந்து பா.ஜ.க மாநிலச் செயலாளர் சீனிவாசனும் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பத்திரிக்கை அலுவலகக் கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தில் பா.ஜ.க மாநிலச் செயலாளர் சீனிவாசன் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொய்மையையே மூலதனமாக வைத்து, அரசியல் வியாபாரம் நடத்தி வரும் ராமதாஸ், திடீரென கற்பனையான ஒரு ஆராய்ச்சி நடத்தி, தற்போது முரசொலி அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என ஒரு செய்தி வெளியிட்டார். அது பஞ்சமி நிலமல்ல; பட்டா நிலம் என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டு, அது பஞ்சமி நிலமென்பதை ராமதாஸ் நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயார்; அப்படி நிரூபிக்காவிடில் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என நான் அறைகூவல் விடுத்திருந்தேன்.


அதனை ஏற்றிட முன்வராத ராமதாஸ், முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடாமல், விவகாரத்தைத் திசை திருப்ப முயன்று, மூலப்பத்திரத்தை வெளியிடவில்லை; பட்டாவை மட்டும் வெளியிட்டுள்ளனர் என்று அறிக்கைவிட்டார்.

இராமதாஸ் நான் விடுத்த அறைகூவலுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் வாய் மூடி மவுனமானார். இப்போது, ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில்,
பாரதீய ஜனதாவின் மாநிலச் செயலாளர் சீனிவாசன், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று ஒரு மனு தந்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து, அது செய்தியாக ஊடகங்களில் வருகிறது. இராமதாஸ் கூற்றை நம்பி, மண் குதிரையில் ஏறி ஆற்றில் இறங்கியுள்ளார் சீனிவாசன்.அவருக்காக அனுதாபப்படுகிறேன். இராமதாசின் கைப்பாவையாகி செயல்படத் தொடங்கியுள்ள சீனிவாசனுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். துளி கூட உண்மையில்லா, ஜமுக்காளத்தில் வடிகட்டிய ஒரு பொய் குறித்து ஆதி திராவிடர் தேசிய ஆணையத்துக்குச் சென்று, நேரத்தை வீணடிப்பதைவிட, அவர் இப்போது கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.ன் முன்னாள் தலைவி ஜெயலலிதாவினால், பையனுரில் பங்களா கட்ட கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட பஞ்சமி நிலத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ராமதாஸுடன் இணைந்து செயல்பட்டால் ஏதாவது பலனாவது கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போதும் காலம் கடந்து விடவில்லை; ராமதாஸுக்கு நான் ஏற்கனவே விடுத்த அறைகூவலை இப்போதும் வலியுறுத்துகிறேன். முரசொலி அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்க, ராமதாஸ் முன் வருவாரா? அவரது கைப்பாவையாகச் செயல்படும் சீனிவாசன், ராமதாசை வலியுறுத்த முன்வருவாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Also see:

First published: October 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading