ஆந்திர பாஜக தலைவர் மீது செருப்பு வீச்சு: தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் விபரீதம்

ஆந்திர பாஜக தலைவர் மீது செருப்பு வீச்சு: தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் விபரீதம்

படம்: ட்விட்டர்.

தெலுங்கு தேசம் ஸ்பான்சர் செய்த செருப்பு வீச்சாகும் இது. ஸ்ரீனிவாச ராவ் தெலுங்கு தேசத்துடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பது அனைவரும் அறிந்ததே.

  • Share this:
தொலைக்காட்சி விவாதங்கள் தற்போதெல்லாம் வார்த்தை, கருத்து மோதலாக இல்லாமல் அதையும் தாண்டிய வன்முறையாக மாறிவருகிறது என்பதற்கு உதாரணமாக ஆந்திராவில் செய்தி சேனல் ஒன்றின் லைவ் விவாதத்தின் போது பாஜக மாநில பொதுச்செயலாளர் விஷ்ணு வர்தன் மீது செருப்பு வீச்சு தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தைக் கூறலாம்.

தெலுங்கு செய்தி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப் பட்ட இந்த விவாதத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் விவாதத்தின் போது எதிர்தரப்பு வாதி ஒருவர் செருப்பை பாஜக தலைவர் விஷ்ணு வர்தன் மீது வீசியது பரபரப்பானது.

விஷ்ணு வர்தன் மீது செருப்பு வீசிய நபர் அமராவதி பரிரக்‌ஷனா சமிதி இணைச் செயற்குழு உறுப்பினரான கொளிக்காபுடி ஸ்ரீநிவாச ராவ் என்று தெரியவந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் பலதரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

இதில் பாஜக தலைவர் விஷ்ணு வர்தன், அமராவதி பரிரக்‌ஷனா சமிதியின் ஸ்ரீநிவாச ராவை நோக்கி உங்களுக்கும் தெலுங்கு தேசத்துக்கும் தொடர்பு உள்ளது ,நீங்கள் தெலுங்கு தேசக் கட்சியின் ஆள் என்ற தொனியில் கூற கோபமடைந்த ஸ்ரீநிவாச ராவ் செருப்பை கழற்றி விஷ்ணு வர்தன் மேல் வீசியிருக்கிறார்.

ஆந்திர பாஜக தலைவர் சோமு வீரராஜு இந்தச் செயலை கண்டித்துள்ளார். பாஜக தேசியத் தலைவர் சுனில் தியோதர், இவர் ஆந்திர இணைத் தலைவருமாவார், இவர் தனது கண்டனச் செய்தியில் ‘குப்பை அரசியல்’ என்றும் சந்திரபாபு நாயுடு இப்படி காசு கொடுத்து டம்மிக்களை விவாதத்துக்கு அனுப்புகிறார் என்று சாடினார்.

அவர் தன் டிவிட்டர் பக்கத்தில், “செருப்பு வீச்சுத் தாக்குதலை கடுமையாகக் கண்டிக்கிறேன். ஏபிஎன் டிவி லைவ் விவாதத்தில் இந்த அநாகரிகமான சம்பவம் நடந்துள்ளது. காசு கொடுத்து டம்மிகளை அனுப்பி இத்தனை கீழ்த்தர அரசியலுக்கு இறங்கி விட்டார் சந்திரபாபு நாயுடு, அபாரமான தெலுங்கு கலாச்சாரத்துக்கு களங்கம் விளைவிக்கும் குப்பை அரசியல் இது” என்று சாடியுள்ளார்.

ராஜ்ய சபா எம்.பி. மற்றும் மூத்த பாஜக தலைவர் நரசிம்ம ராவ் கண்டனம் தெரிவிக்கையில், தெலுங்கு தேசம் ஸ்பான்சர் செய்த செருப்பு வீச்சாகும் இது. ஸ்ரீனிவாச ராவ் தெலுங்கு தேசத்துடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பது அனைவரும் அறிந்ததே. தெலுங்கு தேசத்துக்கு இதில் பங்கு இல்லை என்றால் இந்தச் செயலை சந்திரபாபு நாயுடு கண்டிக்க வேண்டும், என்றார்.
Published by:Muthukumar
First published: