• HOME
 • »
 • NEWS
 • »
 • politics
 • »
 • தமிழை புறக்கணித்துவிட்டு சீன மொழியை புகுத்துவதா? இலங்கைக்கு சீமான் கண்டனம்!

தமிழை புறக்கணித்துவிட்டு சீன மொழியை புகுத்துவதா? இலங்கைக்கு சீமான் கண்டனம்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சீனாவின் அதீத ஆதிக்கமும், அதிகப்படியான அத்துமீறலும் இலங்கையில் வெளிப்படையாக நிகழ்ந்தேறுவது இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் பேராபத்தாக முடியும் என்று சீமான் எச்சரித்துள்ளார்

 • Share this:
  இலங்கையின் அலுவல் பணிகளிலும், அரசின் செயல்பாடுகளிலும், நாட்டின் கடவுச்சீட்டிலும் தமிழை முற்றாகப் புறக்கணித்துவிட்டு சீன மொழியை உட்புகுத்தி வரும் சிங்களப் பேரினவாத அரசின் செயல்கள் அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

  இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்துவரும் சீனா,  கொழும்பு துறைமுகத்தை ஒட்டி, 10, 228 கோடி ரூபாய் மதிப்பில் நகரம் ஒன்றை உருவாக்கியுள்ளது.  இந்த துறைமுக நகரத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக சீனாவே வைத்திருக்கும் என்பதால், இங்கு சீனா, ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதற்கு  பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

  இந்நிலையில்,  இந்த விவகாரம்  தொடர்பாக  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற கொழும்பு துறைமுக நகர் திட்டத்திலுள்ள பெயர் பலகைகளில் தொடங்கி நாட்டின் கடவுச்சீட்டு வரை எல்லாவற்றிலும் சிங்களம், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு இடமளித்து, தமிழ் மொழியை மட்டும் திட்டமிட்டுப் புறக்கணித்து வருவது தமிழர்களிடம் கடும் கொந்தளிப்பையும், பெருஞ்சினத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

  இலங்கையின் பூர்வக்குடி மக்களான தமிழர்களை உரிமை, உடைமை, நிலவுரிமை, அதிகாரம், அரசாட்சி என எல்லாவற்றிலிருந்தும் முற்றுமுழுதாக வெளியேற்றி, சிங்களத்தேசமாக இலங்கையை ஒற்றை மொழியாதிக்கத்தின் கீழ் நிறுவிக்கொண்டிருக்கும் சிங்களவெறியர்களின் கொடுங்கோல் நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்காது சர்வதேசச்சமூகம் கள்ளமௌனம் சாதித்து வருவது ஆற்ற முடியாத பெரும் வலியைத் தருவதாகவும் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.

  தமிழும், தமிழர்களும் ஒதுக்கப்பட்டுப் புறந்தள்ளப்பட்டு வரும் அதேவேளையில், சீனாவின் அதீத ஆதிக்கமும், அதிகப்படியான அத்துமீறலும் இலங்கையில் வெளிப்படையாக நிகழ்ந்தேறுவது இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் பேராபத்தாக முடியும் என்றும் எச்சரித்துள்ளார்.

  தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு, தமிழர் வழிப்பாட்டுத்தலங்களை பெளத்த விகார்களாக மாற்றிவிட்டு, தமிழர்களின் நிலங்களை சிங்களமயமாக்கிவிட்டு, தமிழர்களின் உரிமைகளைப் பறித்துவிட்டு ஒட்டுமொத்த நாட்டையும் சிங்களர்களின் தேசமாக மாற்ற முயலும் இலங்கை அரசின் சதிச்செயலையும், இனவெறி நடவடிக்கைகளையும் இனிமேலாவது பன்னாட்டுச்சமூகமும், அனைத்துலக நாடுகளும் உணர்ந்துகொள்ள வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

  தமிழ்த்தேசிய இனம் இலங்கை எனும் நாட்டுக்குள் எந்தளவுக்கு நிராகரிக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை என குறிப்பிட்ட சீமான்,  ‘ தமிழ்த்தேசிய இனம் அடிமைப்படுத்தப்படும்போது மற்ற தேசிய இனங்கள் வேடிக்கைப் பார்த்து நின்றால், நாளை இதேபோல ஒரு இழிநிலை ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் வருமென்பதை உணர்ந்துகொண்டு தமிழர்களின் பக்கம் நிற்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Murugesh M
  First published: