• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • அமைச்சர் உதயகுமார் வேட்புமனு ஏற்பில் நீடித்த குழப்பம்.. திருமங்கலத்தில் நடந்தது என்ன?

அமைச்சர் உதயகுமார் வேட்புமனு ஏற்பில் நீடித்த குழப்பம்.. திருமங்கலத்தில் நடந்தது என்ன?

திருமங்கலம்

திருமங்கலம்

அமைச்சர் உதயகுமார்  மற்றும் ஆதி நாராயணன் தரப்பினர்கள் இருவரின் மனுக்களையும் நிராகரிக்குமாறு பல புகார் கடிதங்களை மாறி மாறி தேர்தல் அலுவலரிடம் கொடுத்தனர்.

  • Share this:
    திருமங்கலம் தொகுதியில் வேட்புமனு பரிசீலனையின் போது அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க  தரப்பினர் மாறி மாறி அளித்த புகார்களால், நீண்ட இழுபறி ஏற்பட்டு பின்னர் இருவரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டது.

    மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தி.மு.க சார்பில் மணிமாறன், அ.ம.மு.க சார்பில் கூட்டணிக் கட்சியான மருது சேனையின் வேட்பாளர் ஆதி நாராயணன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

    தேர்தல் நடத்தும் அலுவலர் சௌந்தர்யா முன்னிலையில், மொத்தம் 31 வேட்பாளர்களின் 36 மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டன. வேட்பு மனு பரிசீலனைக்கு வந்திருந்த அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கூட்டணி கட்சித் தொண்டர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக வேட்பாளர்களை தனித்தனியே அழைத்து பரிசீலனை செய்வது என தேர்தல் அலுவலர் முடிவெடுத்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதிநாராயணன் தரப்பினர் கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர், பரிசீலனைக்கு இரு தரப்பும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்த பின்னர், சுமார் ஒரு மணி நேர தாமதத்திற்கு பின், அனைவரையும் ஒரே அறையில் வைத்து பரிசீலனை நடைபெற்றது.
    அப்போது, அமைச்சர் உதயகுமார் வேட்புமனு பரிசீலனையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜரானதற்கு, ஆதிநாராயணன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

    இதன் பின்னர், அமைச்சர் உதயகுமார்  மற்றும் ஆதி நாராயணன் தரப்பினர்கள் இருவரின் மனுக்களையும் நிராகரிக்குமாறு பல புகார் கடிதங்களை மாறி மாறி தேர்தல் அலுவலரிடம் கொடுத்தனர். ஆதி நாராயணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்குமாறு அமைச்சர் உதயகுமார் தரப்பில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து உதயகுமார் மீதும் ஆதிநாராயணன் தரப்பினர் சில புகார்கள் முன்வைத்தனர்.

    ஆர்.பி.உதயகுமார்


    அமைச்சர் உதயகுமாரின் வேட்பு மனு மீது ஆதி நாராயணன் தரப்பினர் அளித்த 5 புகார்கள்:

    1. அரசு வழக்கறிஞர் நோட்டரி கையெழுத்து போட்டு உள்ளார்.
    2. அரசு வழக்கறிஞர் வேட்பாளரை முன்மொழிந்து உள்ளார்.
    3. வழக்கறிஞரின் நோட்டரி உரிமம் காலாவதி ஆகிவிட்டது.
    4. வழக்கறிஞர் சீல் விவரங்கள் முறையாக இல்லை.
    5. கடைசி பக்கத்தில் வேட்பாளர் கையெழுத்து இல்லை.

    இந்தப் புகார்களால் இருவரின் வேட்பு மனுக்கள் மீது முடிவெடுப்பதில் மதியம் 3 மணிக்கு மேல் கால தாமதம் ஏற்பட்டது.இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஆதி நாராயணன்,தேர்தல் அலுவலர் ஒருதலை பட்சமாக நடப்பதாகவும், அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தும் அதிகாரிகள் முறையாக பதிலளிக்கவில்லை என்றும் கூறினார்.நீண்ட இழுபறிக்கு பின்னர் 3:45 மணி அளவில் தேர்தல் அலுவலர் செய்தியாளர்களை சந்தித்து தகவல் அளித்தார்.அதன்படி, மொத்தம் 26 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், அதில் அ.தி.மு.க அமைச்சர் உதயகுமார், அ.ம.மு.க கூட்டணி வேட்பாளர் ஆதி நாராயணன், தி.மு.க வேட்பாளர் மணிமாறன் ஆகியோரின் மனுக்களும் உள்ளதாக தெரிவித்தார்.

    இரு தரப்பினரும் வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் அலுவலர் சவுந்தர்யா விளக்கம் அளித்தார். அதன்படி, ஆதி நாராயணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் அவரது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதாலும் அவருக்கு தண்டனைகள் விதிக்கப்படவில்லை என்பதாலும் அந்த புகார் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறினார்.

    அமைச்சர் உதயகுமார் வேட்புமனு மீதான புகார்களுக்கு தேர்தல் அலுவலர் அளித்த விளக்கம்:

    1.அரசு வழக்கறிஞர் நோட்டரி கையெழுத்துப் போடலாம்.
    2.வேட்பாளரை முன் மொழிபவர்கள் வாக்காளர்களாக இருந்தால் போதும். எனவே, வழக்கறிஞர் முன்மொழிந்ததில் தவறில்லை.
    3. 2025 ஆம் ஆண்டு வரை நோட்டரி உரிமம் புதுப்பிக்கப்பட்டு உள்ளதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
    4. வழக்கறிஞர் சீல் முறையற்றது என்பதற்கான விதிகள் இல்லை.
    5. கடைசி பக்கத்தில் வேட்பாளர் அல்லது வழக்கறிஞர் யாராவது ஒருவர் கையெழுத்து போட்டால் போதும்.

    இருவரின் மனுக்களும் ஏற்கப்பட்ட நிலையில், அலுவலக வளாகத்திற்குள் இரு தரப்பினரும் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் இரு தரப்பினரையும் போலீசார் விலக்கி அனுப்பி வைத்தனர்.

    இரு தரப்பினரின் உறுதியற்ற புகார்களால் 1 மணி நேரத்தில் முடிய வேண்டிய வேட்புமனு பரிசீலனை பணிகளை ஒரு நாள் முழுவதும் இழுத்து தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: