செங்கோல் எடப்பாடிக்கு, செங்கல் ஸ்டாலினுக்கு : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

ஆர்.பி.உதயகுமார்

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தி.மு.க ஒரு செங்கல் கூட வைக்கவில்லை என்பதன் அடையாளமாக உதயநிதி செங்கலை தூக்கி கொண்டு அலைகிறார்.

  • Share this:
எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தாங்கள் எதுவும் செய்யவில்லை என்பதன் அடையாளமாக தி.மு.க-வினர் செங்கல்லை தூக்கிக் கொண்டு அலைகிறார்கள் என்றும், அவர்களுக்கு செங்கல் தான் சொந்தம், எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோல் சொந்தம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.கல்லுப்பட்டி முதல் கப்பல்லூர் வரையில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபயண பிரச்சாரத்தை அமைச்சர் உதயகுமார் நடத்தினர். இதில் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் என் சுமார் 5000 பேர் பங்கேற்றனர். நடைபயண பிரச்சாரத்தின் இடையே சாலை ஓரத்தில் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, ஜேசிபி இயந்திரத்தை இயக்கினார்.

பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களை சந்தித்தவர், ‘எதிர்கட்சிகள் அரசின் சாதனைகளை மறைத்து, பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
வானத்தை போர்வையால் மறைக்க நினைக்கும் முட்டாள் தனத்தை எதிர்கட்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.திருமங்கலம் தொகுதி அமைதி பூங்காவாக உள்ளது. பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள், நீதிமன்றம் கண்டித்தும் கூட களங்கம் ஏற்படுத்தும் முயற்சியை செய்து வருகிறார்கள்.

அ.ம.மு.க வேட்பாளராக நிறுத்த ஆள் கிடைக்காமல், குற்ற வழக்குகள் உள்ளவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளார்கள். தி.மு.க சார்பில் நிற்கும் வேட்பாளர் அ.தி.மு.க-வால் பயன்களை அனுபவித்து கொண்டு, இன்று தாயை பழிக்கும் வகையில் பேசி வருகிறார். திருமங்கலத்தில் அமைதியை சீர்குலைக்கும் நபர்களை கட்டுப்படுத்தி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணைய கவன ஈர்ப்பு நடைபயண பிரச்சாரம் நடத்தப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தி.மு.க ஒரு செங்கல் கூட வைக்கவில்லை என்பதன் அடையாளமாக உதயநிதி செங்கலை தூக்கி கொண்டு அலைகிறார். செங்கோலை தூக்க எடப்பாடி பழனிச்சாமி தயாராக இருக்கும் போது, அவர்கள் செங்கலை தூக்குகிறார்கள்.எடப்பாடிக்கு செங்கோல் சொந்தம், ஸ்டாலினுக்கு செங்கல் சொந்தம்” என்றார்.
Published by:Ramprasath H
First published: