வடக்கு - தெற்கு அரசியல் சர்ச்சை’: வட இந்தியாவை இகழ்ந்து பேசினாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி!

வடக்கு - தெற்கு அரசியல் சர்ச்சை’: வட இந்தியாவை இகழ்ந்து பேசினாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி!

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது ஸ்மிருதி இரானி, ஜே.பி.நட்டா, ஜெய் சங்கர் உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த தலைவர்களும் ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். வடக்கு பகுதியை இகழ்ந்தும், தெற்கை புகழ்ந்தும் ராகுல் பேசியிருக்கிறார். பிரிவினைவாத கருத்துக்களை ராகுல் பேசியிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
கேரளாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி ‘வடக்கு - தெற்கு அரசியல்’ என வட இந்தியாவை தாழ்த்திப் பேசியிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. ராகுல் காந்தியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியாக 15 ஆண்டுகாலம் இருந்தவர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அமேதி தொகுதி என்பது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். நேரு குடும்பத்தின் ஆஸ்தான தொகுதியான அமேதியில் சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பல முறை வெற்றி பெற்றிருக்கின்றனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அமேதியிலும், கேரள மாநிலம் வயநாடு என இரண்டு தொகுதிகளில் ராகுல் போட்டியிட்ட போதிலும் ஆஸ்தான தொகுதியான அமேதியில் அவர் தோல்வியை தழுவினார். தற்போது வயநாட்டின் எம்.பியாக அவர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பேசியது சர்ச்சைகுரியதாக மாறியுள்ளது.

பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “என் அரசியல் பயணத்தின் ஆரம்ப காலத்தில் நான் வடக்கே 15 ஆண்டுகள் எம்.பியாக இருந்தேன். இதனால் நான் வேறுவகையான அரசியலுக்கு பழகியிருந்தேன். என் அரசியல் பயணம் கேரளாவுக்கு மாறிய போது புத்துணர்வை தந்தது. கேரள மக்கள் சமூக பிரச்னைகள் மீது மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக அணுகுகின்றனர்” என பேசினார்.



ராகுல் காந்தி என்ன அர்த்தத்தில் இவ்வாறு வடக்கு - தெற்கு என பேசியுள்ளார் என தெரியவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில் சிபல் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ராகுல் பேச்சு தொடர்பாக மாநிலங்களவை எதிர்கட்சித்துணைத் தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில், ராகுல் என்ன அர்த்தத்தில் பேசியிருக்கிறார் என்பதை அவரே தெளிவுபடுத்த வேண்டும். இது தவறுதலாக புரிந்து கொள்ளப்படுவதை அவர் தவிர்க்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரையில் அது ஒரு போதும் நாட்டை பிளவு படுத்தாது. நாட்டின் ஒவ்வொரு பகுதியும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திரத்தின் போது அனைத்து பகுதியைச் சேர்ந்த தலைவர்களும் போராடியுள்ளனர்.” என தெரிவித்தார்.

ராகுலின் பேச்சு தொடர்பாக மற்றொரு காங்கிரஸ் தலைவரான கபில் சிபல் கூறுகையில், “நாட்டின் வாக்காளர்களின் தீர்ப்பு எதுவாகினும் அது மதிக்கப்பட வேண்டும். அவர்கள் எந்த பகுதி என்பதை பார்க்கக் கூடாது. வாக்காளர்களின் தீர்ப்பை நாம் அவமதிக்கக் கூடாது. வாக்காளர்கள் தாங்கள் யாருக்காக வாக்களிக்க வேண்டும் என்பதையும் எதற்காக வாக்களிக்கிறோம் என்பதையும் அறிவார்கள்” என கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது ஸ்மிருதி இரானி, ஜே.பி.நட்டா, ஜெய் சங்கர் உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த தலைவர்களும் ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். வடக்கு பகுதியை இகழ்ந்தும், தெற்கை புகழ்ந்தும் ராகுல் பேசியிருக்கிறார். பிரிவினைவாத கருத்துக்களை ராகுல் பேசியிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Published by:Arun
First published: