• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • ’நானே முதல்வர்’ ரங்கசாமி திடீர் முழக்கம் - கூட்டணியில் குழப்பம்

’நானே முதல்வர்’ ரங்கசாமி திடீர் முழக்கம் - கூட்டணியில் குழப்பம்

ரங்கசாமி

ரங்கசாமி

நமது கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. முதல்அமைச்சர் யார்? என்ற குழப்பத்துக்கே வேலையில்லை.

  • Share this:
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக,என்.ஆர்.காங்கிரஸ்,அதிமுக,பாமக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியின்  முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி துவக்கத்தில் இருந்தே எழுப்பப்படுகிறது. ஆனால் இதற்கு இன்னும் பதில் இல்லை. இக்கூட்டணியின் தலைவராக என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவிக்கப்பட்டார். ஆனால் முதல்வர் வேட்பாளர் யார் என தெரிவிக்கப்படவில்லை.

நமச்சிவாயமே நமது மந்திரம் என பா.ஜ.க-வினரும் ரங்கசாமியே எங்கள் முதல்வர் என என்.ஆர்.காங்கிரசாரும் கூறிவரும் நிலையில் என்.ஆர்.காங் தலைவரான ரங்கசாமி, "நானே முதல்வர்" என பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் தனியார் ஹோட்டலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கறிஞர் சந்திப்பு கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேசினார். அப்போது, “இம்முறை மீண்டும் ஆட்சியை பிடிப்போம். கடந்த ஐந்து ஆண்டுகள் புதுச்சேரியில் காங்கிரஸ்-தி.மு.க மோசமான ஆட்சி நடந்தது. மாநில வளர்ச்சி பத்து ஆண்டுகள் பின்னுக்கு அந்த ஆட்சி  தள்ளியுள்ளது. இது அனைவரின் கருத்தாகவே உள்ளது.

படித்த இளைஞர்களுக்கு ஐந்து ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இல்லை. அரசு வேலையும் தரவில்லை. தனியார் தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. மோசமான சூழலை கடந்த அரசு உருவாக்கிவிட்டது. காங்கிரஸ் முதலமைச்சராகவும், கட்சி தொடங்கி என்.ஆர்.காங்கிரஸ் அரசு முதலமைச்சராகவும் இருந்தேன். புதுச்சேரி வளர்ச்சிக்கு திட்டங்கள் கொண்டு வந்து மக்களுக்காக செயல்படுத்தினேன். இந்த திட்டங்களையும் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்படுத்தவில்லை.

தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. நாராயணசாமி, தேர்தல் அறிக்கையில் 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளதாக கூறுகிறார். ஆனால் எந்த திட்டத்தின் பெயரையும் கூறுவதில்லை. அவர் ஒரு திட்டத்தை கூட நிறைவேற்றவில்லை. எதிர்க்கட்சி 5 ஆண்டு செயல்படாவிட்டால் கவலையில்லை. ஆளும்கட்சி செயல்படாததுதான் தவறு. சட்டசபையில் கேள்வி கேட்டால் பதிலே இல்லை. நாங்கள் என்ன செய்ய முடியும். ஓய்வூதியத்தை கூட உயர்த்தி தரவில்லை. என்ன ஆட்சி இது என மக்கள் வெறுத்து விட்டனர்.

காங்கிரசில் ஒன்றும் செய்யாததால்தான் அக்கட்சியில் இருந்தே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வெளியேறி விட்டனர். இதை சரி செய்தாக வேண்டும். எங்களுக்கு மக்கள் மீதும், புதுச்சேரி வளர்ச்சி மீதும் அக்கறை உள்ளது. கூட்டணியில் முதல்அமைச்சர் பதவி கிடைக்குமா?  தருவார்களா? என்ற குழப்பங்கள்,  கேள்விகள் எழுப்புகின்றனர்.நமது கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. முதல்அமைச்சர் யார்? என்ற குழப்பத்துக்கே வேலையில்லை.நானே முதல்வர்.தேர்தலில் வெல்வோம். சீர் செய்வோம்.

முக்கியமாக புதுச்சேரியின் அதிகாரம் தெரிந்து ஆள வேண்டும். அதிகார சண்டையிலேயே ஐந்து ஆண்டு போய்விட்டது. பின்னுக்கு தள்ளப்பட்ட புதுச்சேரி அரசை முன்னுக்கு கொண்டு வருவோம் என்று அவர் பேசினார்.இந்த பேச்சு கூட்டணி கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: