பாஜக வெற்றி பெற்றால் புதுச்சேரி  நகராட்சியாகி விடும் - திருச்சி சிவா எம்.பி

பாஜக வெற்றி பெற்றால் புதுச்சேரி  நகராட்சியாகி விடும் - திருச்சி சிவா எம்.பி

திருச்சி சிவா

புதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்தால் மாநில அந்துஸ்து பெறாது நகராட்சியாக மாறிவிடுவார்கள் என்ற திருச்சி சிவா எம்.பி தேர்தல் பரப்புரையாற்றினார்.

  • Share this:
திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி.  புதுச்சேரி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். வில்லியனூர் தொகுதியில் போட்டியிடும் சிவா எம்எல்ஏவை ஆதரித்து அவர் சுல்தான்பேட்டையில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர்,புதுச்சேரியின் தலையெழுத்தை தீர்மானிப்பதற்கான தேர்தல் இது.  வாக்காளர்கள் தான் நீதிபதிகள்.

புதுச்சேரியும் தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்களைப்போல் மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு. இதற்காக நாடாளுமன்றத்திலும் பேசியுள்ளோம். மாநில அந்தஸ்து பெற்றால்தான் புதுச்சேரி மக்களுக்கான திட்டங்களை, புதுச்சேரி மக்களால் தேர்வு செய்யப்படும், ஆட்சியாளர்களால் வகுக்க முடியும். அதிமுகவின் ஒரே பணி பாஜகவை பல்லக்கில் அமர்ந்து தோளில் தூக்கிச் செல்வதுதான்.

இந்தியாவில் டெல்லி, புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் தான் சட்டசபையை கொண்டுள்ளன. ஆனால் அங்கு மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும், முடிவுகளையும் புறக்கணிக்கச் செய்யும் வகையில் ஆளுநர்கள் அமர்த்தப்படுகின்றனர். கடந்த வாரம் மத்தியில் ஆளும் பாஜக அரசு டெல்லி ஆளுனருக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்து மசோதாவை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் டெல்லி மாநிலம் நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. அதுபோல் புதுச்சேரியும் நகராட்சியாக மாற்றப்படும் என்றார்.

கல்வி, வேலை வாய்ப்பு, தொழிற்சாலைகள் கொண்டுவருவது, நியாயமான ஊதியம் கிடைக்கச் செய்வது உள்ளிட்டவைகளில் முடிவு எடுக்கும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு கிடைக்க புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும். நாட்டின் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரனைப்போல் மக்களுக்காக நேரம் ஒதுக்கி உழைக்கவும், போராடவும் திமுக தயாராக உள்ளது. உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளுக்காக  வந்துள்ளோம். திமுக வேட்பாளர்களின் வெற்றியால் நல்ல அரசு அமையும், அவர்கள் மாநில உரிமைக்காக குரல் கொடுப்பார்கள். தவறாக வாக்களித்த பின்னர் வருந்தி பயன் இல்லை. இருப்பதையும் இழந்து விட கூடாது என்றும் அவர் கூறினார்.

பொருளாதார வளர்ச்சி பெற, ஜிஎஸ்டியில் புதுச்சேரியின் பங்கை பெற திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்.புதுச்சேரி மக்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை விடுக்கிறேன்.இந்தியாவில்புதுச்சேரி மற்றும் புதுடெல்லி மட்டுமே சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்களாக இருக்கின்றன.புதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்தால் மாநில அந்துஸ்து பெறாது .நகராட்சியாக மாறிவிடுவார்கள்.இதற்கு உதாரணம் டெல்லி.டெல்லியில் உள்ள அரசின் அதிகாரத்தை குறைத்து துணைநிலை ஆளுநருக்கு அதிகாரத்தை கூட்டி சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இதனை எதிர்த்து பாராளுமன்றத்தில் போராடி வருகிறோம்.இந்த நிலை புதுச்சேரிக்கும் வர கூடாது என்றால் காங்-திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார்.எங்கள் கூட்டணிக்கு  வாக்களித்தால் நீட் ரத்து செய்யப்படும்..உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது.இதற்கு முக்கிய காரணம் விவசாயிகள்.இந்த விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் திருச்சி சிவா எம்பி பேசினார்.
.
Published by:Vijay R
First published: