வேளாண் சட்ட நகலை முதலமைச்சர் நாராயணசாமி கிழித்தெறிந்ததோடு சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
வேளாண் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியி எல்லைப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் அதிகாரிகளும் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் ஒன்பது சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் 2024ம் ஆண்டு மே மாதம் வரை, அல்லது அடுத்த லோக்சபா தேர்தல் வரை போராட்டம் நீடிக்கும் என்று விவசாயச் சங்கத்தினர் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறியும், மக்கள்நலனுக்காக கூட்டம் கூட்டப்படவில்லை என்று கூறியும், இந்தக் கூட்டத்தை அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணித்தனர். செயல் வீரர்கள் கூட்டம் இருப்பதால் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என திமுக ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனால், காங்கிரஸ் உறுப்பினர்களும், பாஜக-வின் இரு நியமன உறுப்பினர்களும் மட்டுமே இந்த சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
டெல்லியில் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
வேளாண் சட்ட நகலை முதலமைச்சர் நாராயணசாமி கிழித்தெறிந்ததோடு, சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, கூட்டத் தொடரானது 4 மணிவரை சபாநாயகர் சிவக்கொழுந்தால் ஒத்தி வைக்கப்பட்டது.