`தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கை கடற்படையை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும்!' - தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

`தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கை கடற்படையை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும்!' - தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

கோப்புப்படம்

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறலைத் தடுக்க வேண்டும் என்றார்.

  • Share this:
    தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கை கடற்படையை பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறலைத் தடுக்க வேண்டும் என்றார். இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், இலங்கை வசம் உள்ள படகுகளை திரும்ப கொண்டு வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்

    இதேபோல, இலங்கை கடற்படையால் இதுவரை 245 மீனவர்கள் உயிரிழந்து இருப்பதாக கூறிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, இந்த விவகாரத்தில் இலங்கை அரசுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்றும், தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

    இருவரின் கேள்விகளுக்கும் பதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த மாதம் இலங்கை கடற்படை தாக்குதலில் 4 மீனவர்கள் உயிரிழந்தது தொடர்பாக இலங்கை அரசு விசாரணை நடத்துவதாகவும், அதன் முடிவுக்காக இந்தியா காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இலங்கை வசம் உள்ள 173 படகுகளில், பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள 62 படகுகளை விடுவிக்க முயற்சித்து வருவதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.

    தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு இலங்கை அரசுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Ram Sankar
    First published: