தொகுதியும் வாங்கியாச்சு... வேட்பாளரையும் அறிவிச்சாச்சு - பூத் கமிட்டியால் ப.சிதம்பரம் அப்செட்

தொகுதியும் வாங்கியாச்சு... வேட்பாளரையும் அறிவிச்சாச்சு - பூத் கமிட்டியால் ப.சிதம்பரம் அப்செட்

ப.சிதம்பரம்

காரைக்குடியில் களம் காணும் மாங்குடி ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராம். காரைக்குடியை ஒட்டியுள்ள சங்காரபுரம் ஊராட்சி தலைவராக இருக்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் மீது கொண்ட அதிருப்தியால் இடைப்பட்ட சிறிது காலம் த.மா.கா.,வுக்கு தாவி விட்டு மீண்டும் காங்கிரசில் இணைந்தவர்.

  • Share this:
    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளில் கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கியது, வேட்பாளர் பட்டியல் ஏற்பட்ட அதிருப்தி இதன்காரணமாக தொண்டர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டதும் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவமும் நடந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியிலோ கான்செப்டே வேறு விதமாக இருந்தது. வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே அக்கட்சி தலைவர்கள் பகிரங்கமாக வேட்பாளர்கள் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் கொடிக்கட்டி பறப்பதைதான் இது காட்டுகிறது.

    இந்நிலையில் நேற்றிரவு 21 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. முன்னாள் மத்திய நிதியமைச்சர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சொந்த தொகுதியான காரைக்குடியிலே கோஷ்டி பூசல் தாண்டவம் ஆடுகிறது. சிதம்பரத்தின் தீவிர அழுத்தத்தால், தி.மு.க.வினர் எவ்வளவோ போராடியும் காரைக்குடி சட்டமன்ற தொகுதியை காங்கிரசுக்கே தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. தொகுதியை வாங்கி என்ன செய்வது களத்தில் பணியாற்ற ஆட்கள் வேண்டும். பூத் கமிட்டி கூட்டத்திலே கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. இதனால் ப.சிதம்பரம் கடும் அப்செட்டில் உள்ளார். காரைக்குடி தொகுதியில் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான மாங்குடி களம் காண்கிறார்.

    பூத் கமிட்டி கூட்டத்துக்கு வரும்போதெல்லாம் பள்ளிக்கூட ஹெட்மாஸ்டர் போன்று கையில் லிஸ்டோடு வருகிறாராம் ப.சிதம்பரம். சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் லிஸ்டில் உள்ள பெயரை வாசித்து அட்டெண்டன்ஸ் எடுத்துள்ளார். பெயரை வாசிக்க ஒவ்வொருவரையும் கையைத் தூக்குங்கள் என்று சொல்லியுள்ளார். லிஸ்டில் 62 பேர் இருந்துள்ளனர் கையை உயர்த்தியவர்களின் எண்ணிக்கையோ 22 தானாம்.

    ப.சிதம்பரம்


    இதனால் டென்ஷனான ப.சிதம்பரம் “பூத் கமிட்டி கூட்டத்துக்கு வராதவங்க.. எப்படி தேர்தல் வேலை செய்வாங்க. இந்த தொகுதியை வாங்கவில்லை, அந்த தொகுதியை வாங்கவில்லை என்று மட்டும் தலைமையை குறை சொல்கிறீர்கள். இங்க பாருங்க பூத் கமிட்டி கூட்டத்துக்கே ஆள காணோம். இப்படியே போனா இந்த 25 தொகுதி கூட அடுத்தமுறை கிடைக்காது. தொகுதியை விட்டு கொடுத்து விடுவோமா? தலைமையை மட்டும் குறை சொல்கிறீர்கள். நீங்கள் கடமையை செய்வது கிடையாது” எனக் கூட்டத்தினரை கடித்துக்கொண்டுள்ளார்.

    தேவகோட்டையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கு சென்றால் அங்கு முன்னாள் நகராட்சி தலைவராக இருந்த கான்ட்ராக்டர் வேலுச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் அவரை சூழ்ந்து கொண்டுள்ளனர். வேலுச்சாமிக்கு சீட் தாருங்கள் என கூறி மனு கொடுத்து அவரை முற்றுகையிட்டு அப்செட் செய்து அனுப்பி வைத்தனர். எதுக்கு இந்த தொகுதியை கேட்டு வாங்கினோம் என தனது ஆதரவாளர்களிடம் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் ப.சிதம்பரம்.

    காரைக்குடியில் களம் காணும் மாங்குடி ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராம். காரைக்குடியை ஒட்டியுள்ள சங்காரபுரம் ஊராட்சி தலைவராக இருக்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் மீது கொண்ட அதிருப்தியால் இடைப்பட்ட சிறிது காலம் த.மா.காவுக்கு தாவி விட்டு மீண்டும் காங்கிரசில் இணைந்தவர். ப.சிதம்பரத்தின் சிபாரிசு காரணமாக காரைக்குடி சட்டமன்ற வேட்பாளராக மாங்குடியை காங்கிரஸ் தலைமை டிக் செய்துள்ளது. கூட்டணி கட்சியான தி.மு.க-வில் ஒரு தரப்பினரும், காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினரும் மாங்குடிக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது. மாங்குடி செலவு செய்ய மாட்டார். தேர்தலில் நல்லா செலவு செய்தால்தான் நாம் வெற்றிப்பெற முடியும். இவர் கட்சிக்காரர்களிடமே கஞ்சத்தனம் காட்டுவார் என்று புகார் வாசிக்கின்றனர்.

    பிரபல தொழிலதிபரான படிக்காசுவின் மகன் பாலசுப்பிரமணியத்தை வேட்பாளராக நிறுத்தலாம் என தி.மு.கவில் ஒர தரப்பினரும், காங்கிரசில் ஒரு தரப்பினரும் ப.சிதம்பரத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். ப.சிதம்பரம் கையை காட்டியது மாங்குடியைதான். எனவே காங்கிரஸின் கை சின்னத்தில் காரைக்குடியில் களம் காண்கிறார். அ.தி.மு.க கூட்டணியில் காரைக்குடி தொகுதி பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் இரு தேசிய கட்சிகளும் மோதுகின்றன. மாங்குடிக்கு இந்தத் தேர்தல் அக்னிப்பரீட்சையாகதான் இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

    செய்தியாளர்: முத்துராமலிங்கம்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: