காங்கிரஸ் தலைமை மேல் அதிருப்தி: கேரள மூத்த காங்கிரஸ் தலைவர் பி.சி சாக்கோ திடீர் ராஜினாமா!

காங்கிரஸ் தலைமை மேல் அதிருப்தி: கேரள மூத்த காங்கிரஸ் தலைவர் பி.சி சாக்கோ திடீர் ராஜினாமா!

பி.சி சாக்கோ

மாநில தலைவர்களிடம் கலந்தாலோசிக்காமலே வேட்பாளர் தேர்வு நடைபெற்றுள்ளது. காங்கிரஸில் ஜனநாயகம் இல்லை. மாநில காங்கிரஸ் கமிட்டியுடன் வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசிக்கப்படவில்லை என சாக்கோ அதிருப்தி தெரிவித்தார்.

  • Share this:
 

தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் கட்சி மேலிடம் மீதான அதிருப்தியால் கேரளாவின் மூத்த காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ திடீரென ராஜினாமா செய்துள்ளது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸில் எந்த ஜனநாயகமும் மிச்சமில்லை இப்படித்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ பத்திரிகையாளர் சந்திப்பில் பேசத் தொடங்கினார். கேரள காங்கிரஸில் மிக மூத்த தலைவராக விளங்கி வரும் பி.சி.சாக்கோ 2009 - 14 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர், இ.கே.நாயனார் அரசில் தொழில்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் என என்னற்ற பதவிகளில் இருந்துள்ளார். மேலும் 2ஜி விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக சாக்கோ தெரிவித்தார்.

ராஜினாமா முடிவு தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் சாக்கோ பேசுகையில், காங்கிரஸில் இருந்து விலகுவது குறித்து நீண்ட நாட்களாக சிந்தித்து வந்ததாகவும், கேரள காங்கிரசில் எந்த சுயமரியாதை அரசியல்வாதியும் நீடிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

நான் கேரளாவிலிருந்து வருகிறேன், அங்கு காங்கிரஸ் கட்சி இல்லை. Congress (I) மற்றும் Congress (A) என இரண்டு பிரிவுகள் மட்டும் தான் உள்ளது. கேரள காங்கிரஸ் பிரிவாக செயல்படும் இரு கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு மட்டுமே எனவும் அவர் தெரிவித்தார்.

உம்மன் சாண்டி தலைமையில் Congress (A) மற்றும் ரமேஷ் சென்னிதாலா தலைமையில் Congress (A) என இந்த பிரிவுகளே பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளன.

கேரளா ஒரு முக்கியமான தேர்தலை எதிர்கொள்கிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள், ஆனால் காங்கிரஸின் உயர் தலைவர்களால் குழுவாதம் நடைமுறையில் உள்ளது. இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நான் மேல்மட்ட தலைமையிடம் வாதிட்டு வருகிறேன். ஆனால் இரு குழுக்களும் சொல்லும் வார்த்தைக்கே கட்சியின் தலைமையும் கட்டுப்படுகிறது என சோனியா மற்றும் ராகுல் காந்தியின் பெயரை கூறாமல் சாக்கோ பேசினார்.

மாநில தலைவர்களிடம் கலந்தாலோசிக்காமலே வேட்பாளர் தேர்வு நடைபெற்றுள்ளது. காங்கிரஸில் ஜனநாயகம் இல்லை. மாநில காங்கிரஸ் கமிட்டியுடன் வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசிக்கப்படவில்லை. அதற்கான எந்த ஒரு குழுவும் அமைக்கப்படவில்லை. இனிமேல் காங்கிரஸில் இருப்பதில் அர்த்தமில்லை என காட்டமாக தெரிவித்தார். மேலும் தான் பாஜகவில் இணையப்போவதில்லை எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சில சீனியர் தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய விவகாரம் தொடர்பாக G-23 தலைவர்களை விமர்சித்திருந்தார் சாக்கோ. தற்போது அவரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. G-23 தலைவர்கள் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளனர். நான் அவர்களுடன் சேரப்போவதில்லை, ஆனால் அவர்கள் எழுப்பியது மிகவும் முக்கியமான கேள்விகள் என்று மட்டும் கூறுகிறேன். கேரள காங்கிரஸில் நடைபெற்று வரும் இந்த உட்கட்சி பூசலால் காங்கிரஸ் மாநிலத்தில் தோல்வியை தழுவும் எனவும் அவர் தெரிவித்தார்.

சாக்கோவின் ராஜினாமா கேரள காங்கிரஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: