ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து மீண்டும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு...

  • Share this:
அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற மோதல் முற்றியுள்ள நிலையில், ஒருவார காலத்திற்கு பிறகு அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சரோடு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற மோதல் நிலவி வரும் நிலையில், அக்கட்சி செயற்குழு கூட்டத்திற்கு பிறகு மோதல் வலுத்துள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரை அவரது ஆதரவாளர்கள் தனித்தனியாக சந்தித்து பேசி வருகின்றனர். மூன்றாவது நாளாக ஜேசிடி பிரபாகர், ஓபிஎஸ்-ஐ அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அவரை தொடர்ந்து முன்னாள் எம்.பி.தம்பிதுரையும், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மறுபுறம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இப்படி, தனித்தனி சந்திப்புகளால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இல்லங்கள் அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலையே பரபரப்பாகியுள்ளது.

இந்த நிலையில், வரும் 7ம் தேதி அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டதாக தகவல்கள் பரவின. 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் யாரென தெரியவரும் என ஏற்கெனவே துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில், முன்கூட்டியே 6ம் தேதியே அனைத்து எம்எல்ஏ-க்களும் சென்னை வர வேண்டுமென அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. சுமார் 12 மணியளவில் பதிவிடப்பட்ட இந்த அறிவிப்பு, அடுத்த சில மணி நேரங்களிலேயே நீக்கப்பட்டுவிட்டது.


செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அரசு நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஒருவார காலத்திற்கு பிறகு காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தின நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அருகருகே இருந்தபோதும், இருவரும் பேசிகொள்ளவில்லை.

இதனிடையே, முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு 7ம் தேதி வந்துவிடுமா அல்லது தாமதமாகுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 7ம் தேதி வரவில்லை என்றால் தன்னிடம் வந்து கேட்குமாறு, அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்

 அதேசமயம், வரும் 7-ஆம் தேதி அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளிவர வாய்ப்பில்லை என அமமுகவின் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். நியூஸ் 18க்கும் காணொலி வாயிலாக பேட்டியளித்த அவர், ஜெயலலிதா இருந்த பழைய அதிமுகவை, அமமுக மீட்டெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில், யார் முதலமைச்சர் என அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த போட்டி அக்கட்சியினரை குழப்பமடையச் செய்துள்ளது.
First published: October 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading