மேற்கு வங்க தேர்தல் இந்த ஆண்டில் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரவீந்தர்நாத் தாகூரின் கவிதையை மேற்கோள் காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க, மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என கடுமையாக பணியாற்றி வருகிறது. அதற்கேற்ப, மம்தா பானர்ஜியின் மீது அதிருப்தியில் இருக்கும் முக்கிய தலைவர்களும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்து வருகிறனர். இதனால், அம்மாநிலத்தை ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் போக்கு நீடித்து வருகிறது.
கிடைக்கும் சந்தர்பங்களையெல்லாம் மேற்குவங்க தேர்தலுக்கான வாய்ப்பாக பா.ஜ.க மாற்றி வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று 9வது முறையாக நாட்டின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நோபல் பரிசு பெற்ற மேற்குவங்கத்தைச் சேர்ந்த கவிஞர் ரபீந்திரநாத் கவிதைகளை மேற்கோள்காட்டி பேசினார். கொரோனாவுக்கு எதிராக இந்தியா எடுத்த தீவிரமான நடவடிக்கைகள் குறித்து பேசும்போது, தாகூரின், "நம்பிக்கை பறவை எப்போதும் வெளிச்சத்தை மட்டும் தேடும், இருள் சூழந்திருந்தாலும் விடியலுக்காக அது பாடிக்கொண்டே இருக்கும்" (Faith is the bird that feels the light and sings when the dawn is still dark) என்ற வரிகளை சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நம்பிக்கையையும், சத்தியமும் நிறைந்திருக்கும் நிலத்தில் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றுவதற்காகவே தாகூர் இந்த வரிகளை பாடியிருக்கிறார் என பேசிய நிர்மலா சீத்தாராமன், மறைமுகமாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியையும் சாடினார். மேலும், மேற்குவங்க பெண்கள் விஷேச நாட்களில் அணியும் சிவப்பு கறையுடன் கூடிய வெள்ளை சேலையையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்திருந்தார். இதனை உன்னிப்பாக கவனித்த நெட்டிசன்களும், மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்தே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மாநில பெண்களின் உடையை அணிந்து, தாகூரின் கவிதைகளை மேற்கோள் காட்டியதாக தெரிவித்துள்ளனர்.
அண்மையில், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர், தாகூர் எழுதிய தேசிய கீதத்தை தவறாக பாடியதாக கூறப்படுகிறது. இதனை கையில் எடுத்த மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர், பா.ஜ.கவுக்கு எதிராக பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தி வீதிவீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பட்ஜெட்டில் தாகூரின் கவிதைகளை மேற்கோள்காட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது அம்மாநில அரசியல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, West Bengal Election