வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதை தள்ளிப்போடும் மமதா பானர்ஜி? - காரணம் என்ன

மமதா பானர்ஜி

மேற்குவங்கத்தில் பீகாரை சேர்ந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். ஹவுரா, மேற்கு புர்த்வான், கொல்கத்தா மற்றும் பீகாரின் அண்டை மாவட்டங்களில் இவர்களின் எண்ணிக்கை வெற்றிக்கு பங்களிக்கும் வகையில் இருக்கிறது.

  • Share this:
திரிணாமுல் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுவதாக அறிவித்த நிலையில் தேஜஸ்வி யாதவுடன் புதிய கூட்டணிக்கு அடித்தளம் கிடைத்துள்ளதால் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டை மமதா பானர்ஜி ஒத்திவைத்திருப்பதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சாமில்லாத தேர்தல் என்றால் அது மேற்குவங்கமாகத்தான் இருக்கும். சமீப நாட்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பெருவாரியான தலைவர்கள் விலகி பாஜகவில் சேர்ந்த நிலையில் துவண்டு போயிருந்த மமதா பானர்ஜி தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறார். வன்முறை சம்பவங்கள் அதிகரித்ததன் காரணமாக மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் 4 கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை மமதா பானர்ஜி இன்று வெளியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் மேற்குவங்கத்தில் கால்பதிக்க முனைப்பு காட்டி வரும் அண்டை மாநிலமான பீகாரின் எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை கூட்டணியில் இணைத்து தேர்தலை எதிர்கொள்ள மமதா முடிவெடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

தொகுதி பங்கீடு தொடர்பாக காளிகாட்டில் உள்ள மமதா பானர்ஜியின் இல்லத்தில் அவரை இன்று மாலை 4 மணியளவில் தேஜஸ்வி யாதவ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது, முன்னதாக காளிகாட் கோவிலில் தரிசனம் செய்யும் தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியும் மமதாவின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி மற்றும் மாநில அமைச்சர் ஃபிர்ஹத் ஹக்கீம் ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறார்.

இதனிடையே இன்று காலை 11.30 மணியளவில் தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன்
மமதா பானர்ஜி பேச்சுவார்தை நடத்தி உள்ளார்.

மேற்குவங்கத்தில் பீகாரை சேர்ந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். ஹவுரா, மேற்கு புர்த்வான், கொல்கத்தா மற்றும் பீகாரின் அண்டை மாவட்டங்களில் இவர்களின் எண்ணிக்கை வெற்றிக்கு பங்களிக்கும் வகையில் இருக்கிறது. இந்த பகுதிகளில் உள்ள 10 முதல் 12 தொகுதிகளில் போட்டியிட தேஜஸ்வி விரும்புகிறார்.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ஆதரவை ஏற்கனவே தந்துள்ளார்.

இதனிடையே விளையாட்டு மற்றும் சினிமா துறை பிரபலங்கள் சிலர் புதிதாக கட்சியில் இணைந்த போதிலும் எந்தவித பிரச்னையிலும் சிக்காதவர்களை வேட்பாளர்களாக மமதா பானர்ஜி தேர்வு செய்திருப்பதாக கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

முதல் கட்டமாக மார்ச் 27ம் தேதி தொடங்கி இறுதிக் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ம் தேதி நிறைவடைய உள்ளது. தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி வெளியாகிறது.
Published by:Arun
First published: