பாடத்தொகுப்பில் இருந்து அடிப்படைகளை நீக்கியது பன்முகத்தன்மைக்கு எதிரானது - சீமான் கண்டனம்

"இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கியது பன்முகத்தன்மைக்கு எதிரான ஒற்றைமயமாக்கலின் மற்றொரு வடிவமே" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாடத்தொகுப்பில் இருந்து அடிப்படைகளை நீக்கியது பன்முகத்தன்மைக்கு எதிரானது - சீமான் கண்டனம்
சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.
  • Share this:
"இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கியது பன்முகத்தன்மைக்கு எதிரான ஒற்றைமயமாக்கலின் மற்றொரு வடிவமே" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் யாவும் மூடப்பட்டுள்ள நிலையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-12 ஆம் வகுப்புக்கான பாடங்களை 30 விழுக்காடு குறைப்பதாகக் கூறி, இந்திய அரசியலமைப்புச்சட்டத்திலுள்ள அடிப்படையானக்கருத்துகளை மொத்தமாக நீக்கியிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தற்காலப்பேரிடர் சூழலிலும் தனது ஒற்றைமயமாக்கல் நடவடிக்கைகளை வீரியமாய்ச் செய்து வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதன் நீட்சியாகவே தற்போது பாடத்திட்டத்தில் கைவைத்து, இந்நாட்டின் அடிப்படைக்கட்டமைப்புத் தூண்களாக இருக்கிற சனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை போன்றவற்றைப் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கி அறிவித்திருக்கிறது. பள்ளியில் பயிலும் பிஞ்சுகளின் உள்ளத்திலிருந்து சனநாயகம், மதச்சார்பின்மை, குடியுரிமை குறித்த சிந்தனைகளையே அகற்ற முயலும் மத்திய அரசின் பாசிச நடவடிக்கைகள் நாட்டின் ஒருமைப்பாட்டையே குலைக்கும் பேராபத்தாகும்.

9ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் சனநாயக உரிமைகள் எனும் பாடமும், 10ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் சனநாயகம், பன்முகத்தன்மை, பாலினம், சாதி, சமயம், இயக்கங்கள், போராட்டங்கள், சனநாயகத்திற்கு எதிரான சவால்கள் உள்ளிட்டவைகளும், 11ஆம் வகுப்புப் பாடத்திட்டத்திலிருந்து குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவைகளும், 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்திலிருந்து பாகிஸ்தான், மியான்மர், வங்காளதேசம், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடனான வெளியுறவுக்கொள்கைகள், மாறிவரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி திட்டக்குழு, பணமதிப்பிழப்பு, இந்தியாவில் சமூக இயக்கங்கள் போன்ற அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்நாடு கொண்டிருக்கிற பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை எனும் மகத்தானக்கோட்பாடுகளை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துவதைத் தடுக்கும்வகையில் அவற்றைப் பாடத்திட்டத்திலிருந்தே அப்புறப்படுத்தும் பாஜக அரசின் எதேச்சதிகாரச் செயல்பாடுகள் ஒற்றைமயக்காலின் மற்றொரு வடிவமே! மக்களாட்சிக்கும், சனநாயகத்திற்குமே ஊறு விளைவித்து இந்நாட்டின் அடிப்படைக்கட்டமைப்பையே ஒவ்வொரு நகர்வின் மூலமாகத் தகர்க்க முயலும் பாஜக அரசின் படுபாதக நடவடிக்கைகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது. இதற்கெதிராக தேசிய இனங்களும், மாநிலக் கட்சிகளும், சனநாயக ஆற்றல்களும் அணிதிரண்டு அதனை முறியடிக்க வேண்டியது தற்காலத்தின் பெருங்கடமையாகிறது.


ஆகவே, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்திலிருந்து சனநாயகம் தொடர்பாக 30 விழுக்காடு பாடத்திட்டத்தை நீக்குவது தொடர்பான அறிவிப்பாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading