மோடி தலைமையிலான பா.ஜ.க மட்டுமே பயங்கரவாதங்களில் இருந்து அசாமை காப்பாற்ற முடியும் - அமித் ஷா

மோடி தலைமையிலான பா.ஜ.க மட்டுமே பயங்கரவாதங்களில் இருந்து அசாமை காப்பாற்ற முடியும் - அமித் ஷா

அமித் ஷா

கடந்த ஐந்து ஆண்டுகளில் அஸ்ஸாமில் ஏற்பட்ட வளர்ச்சி காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளில் ஏற்படவில்லை.

 • Share this:
  தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் உள்ள முன்னனி கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அவ்வகையில், அசாமில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. பிரசாரத்தின் ஒருபகுதியாக மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு இன்று பேசினார்.

  கோக்ராஜ்கர் பகுதியில் போடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஓராண்டு நிறைவு அடைய உள்ள நிலையில், இதுதொடர்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா, ``அசாம் மாநிலத்தை ஊழல் இல்லாத, ஊடுருவல் இல்லாத, பயங்கரவாதம் இல்லாத மற்றும் மாசுபாடு இல்லாத மாநிலமாக மாற்ற மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் இருந்தால் மட்டுமே முடியும். வரவிருக்கும் தேர்தலில் பெரும்பான்மையுட பா.ஜ.க கூட்டணியை வெற்றி பெறச் செய்து மாநிலத்தின் வளர்ச்சியை உறுதி செய்யுங்கள்” என்று தெரிவித்தார்.

  காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசிய அமித் ஷா, ``காங்கிரஸ் கட்சி அசாமை பல ஆண்டுகளாக ரத்தத்தில் கறை படிய வைத்தது. மாநிலத்தில் பல்வேறு இயக்கங்களை தூண்டிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அசாமில் ஏற்பட்ட வளர்ச்சி காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளில் ஏற்படவில்லை. அரசியல் காரணங்களுக்காக இம்மாநில மக்கள் பல ஆண்டுகளாக அஸ்ஸாமியர்கள் - அஸ்ஸாமியர் அல்லாதவர்கள், போடோ - போடோ அல்லாதவர்கள் என்ற பெயர்களில்ல் வேறுபடுத்தப்படுகின்றனர்” என்று குறிப்பிட்டு பேசினார்.

  பா.ஜ.க துணைதலைவரும் அசாமின் கட்சி பொறுப்பாளருமான பைஜெயந்த் ஜெய் பாண்டா தற்போது அசாமில் இருந்து அமித் ஷாவுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அவர் பேசும்போது, ``உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக அஸ்சாமிற்கு வருகிறார். போடோலாண்ட் ட்ரைபர் கவுன்சில் பகுதி கூட்டத்தில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அரசாங்க திட்டங்களையும், அரசியல் நிலைமைகளையும் ஆய்வு செய்ய உள்ளார். பின்னர், நல்பாரி பகுதியில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்” என்று தெரிவித்தார்.

  அமித் ஷா கடைசியாக அசாம் மாநிலத்திற்கு பயணம் வந்தபோது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்ஸாம் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற மே மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
  Published by:Ram Sankar
  First published: