பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு மோடி அரசு நடவடிக்கை எடுக்கும் - குஷ்பு உறுதி

பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு மோடி அரசு நடவடிக்கை எடுக்கும் - குஷ்பு உறுதி

பா.ஜ.க

பெட்ரோல், டீசல் விலையேற்றம் தொடர்பாக மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பா.ஜ.க முக்கியத் தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னை அண்ணா சாலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக பாஜக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற பொறுப்பாளர் குஷ்பு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுதாகர் ரெட்டி, "கடந்த 6.5 ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து பல்வேறு திட்டப் பணிகளுக்காக 6 லட்சம் கோடி நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசு வழங்கிய இந்த நிதியே தமிழகத்தின் வரலாற்றில் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நிதி. அதேபோல் வரும் தேர்தலில் இரண்டு இலக்க எண்ணிக்கையிலான பா.ஜ.க உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் இடம்பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "திமுக வேலை வைத்து தற்போது பிரச்சாரம் செய்து வருகிறது. மக்கள் இதனை புரிந்து கொள்வார்கள். காங்கிரஸும் திமுகவும் குடும்ப ஆட்சியை நடத்தினார்கள். ஆனால் பா.ஜ.க மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறது. கடந்த பட்ஜட்டில் 8 கோடியும் இந்த பட்ஜட்டுல் 9 கோடியும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறுகளால் பல்வேறு பிரச்சனைகள் நாட்டில் உருவாகியுள்ளது. பிரதமர் மோடி அனைத்து பிரச்சனைகளை குறித்தும் அறிவார்” என்று எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.

மேலும், "பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நோய்த் தொற்றால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவின் பொருளாதார நிலையை மத்திய அரசு கடும் போராட்டங்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தியுள்ளது. நாட்டின் வளர்ச்சியை பிரதமர் மோடி காணும் கண்ணோட்டத்தில் பார்க்காத பலர் #GoBackModi என்பதை டிரெண்ட் ஆக்கியுள்ளனர். ஒரு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் கூட பா.ஜ.க சார்பில் தமிழகத்திற்கு இல்லாத நிலையிலேயே தமிழகத்தின் நலனுக்காக இத்தனை லட்சம் கோடியை மத்திய அரசு ஒதிக்கியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றும் பேசினார்.

சுதாகர் ரெட்டியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ, `அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட நான் இடம் கேட்கவில்லை. நான் அந்த தொகுதியின் பொறுப்பாளர் மட்டுமே. யாருக்கு அங்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அவர்களை நிற்க வைத்து வெற்றி பெற வைப்போம்” என்றார்.

மேலும் #GoBackModi என்பதை ட்வீட் செய்பவர்களுக்கெல்லாம் நான் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜனநாயக நாட்டில் அவரவர் கருத்துக்களைக் கூற உரிமை உள்ளது என்றும் மோடியை GoBackModi சொல்ல என்ன காரணம் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையேற்றத்திற்கு விரைவில் உரிய நடவடிக்கையை மோடி அரசாங்கம் எடுக்கும். காங்கிரஸ், தி.மு.க அவர்களின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்திற்கு என்னென்ன நலத்திட்டங்களை கொண்டு வந்தது? எவ்வளவு நிதியை ஒதுக்கியது? என்பதை கூறிவிட்டு பா.ஜ.க ஆட்சி நடத்துவது பற்றி கருத்து பேசட்டும்” என்றும் குறிப்பிட்டார். செய்தியாளர்கள் சந்திப்பு முடிவடைந்த பின்னர், சிறப்பு விருந்தினர்கள் முன்பாகவே, பாஜக மாவட்ட நிர்வாகிகளுக்கு இடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.  சிறப்பு விருந்தினர்கள் பாஜகவினரை அமைதிப்படுத்தி சமாதானம் செய்து அமர வைத்தனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: